அல்கொய்தா தலைவரை அமெரிக்கா கொன்றது எப்படி?
06 Aug,2022
வெடிக்காத, பெரும் சத்தம் எதையும் எழுப்பாத ஏவுகணையை கொண்டு, அல்கய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை, அமெரிக்கா எப்படி கொன்றது என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு அமைப்பு, ஜவாஹிரிக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது தொடர்பாக அமெரிக்கா பல்வேறு தகவல்களை சேகரித்து வந்தது. கடந்தாண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு, அங்கு ஜவாஹிரியின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணிக்கும் பணிகளை அமெரிக்காவின் சிஐஏ தொடங்கியது. இந்நிலையில், ஜவாஹிரி தனது மனைவி, மகள் மற்றும் அவரது பிள்ளைகளுடன், காபூலின் ஷெர்பூர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியது தெரிய வந்திருக்கிறது.
இருப்பிடத்தை உறுதி செய்த உளவுத்துறை:
உளவுத்துறையின் பல மாத முயற்சிகளுக்குப் பின் அங்கு வசிப்பது ஜவாஹிரி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பல்வேறு தனிநபர்களிடம் இருந்து தகவல்களை திரட்டி, ஜவாஹிரியின் தினசரி வாழ்க்கை முறையை துல்லியமாக அறிந்தனர்.
இந்த தகவல்களை கேட்டறிந்த அதிபர் பைடன், கட்டடம் முழுமையாக சேதமடைந்து பொதுமக்கள் உயிரிழப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக ஜவாஹிரி தங்கியிருந்த கட்டடம் மற்றும் அவர் இருந்த வீட்டின் வடிவமைப்பு பற்றியும் முழு தகவல்களை திரட்டினர். அப்போது, தனது வீட்டின் பால்கனியில் அடிக்கடி அமர்வதை ஜவாஹிரி வாடிக்கையாக கொண்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.இதையடுத்து, கடந்த 25ம் தேதி நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், வான்வழி தாக்குதல் மூலம் ஜவாஹிரியை கொல்ல அதிபர் பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி கடந்த சனிக்கிழமை இரவு 9.48 மணியளவில், தனது வீட்டின் பால்கனியில் அமர்ந்து இருந்த ஜவாஹிரியை, டிரோனில் இருந்து இரண்டு ஏவுகணைகளை செலுத்தி அமெரிக்க கொன்றது. இந்த தாக்குதலில் Hellfire R9X எனும் ஏவுகணையை அமெரிக்க பயன்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை வெடிக்கவோ, பலத்த சத்தத்தையோ ஏற்படுத்தாது.