புவி வெப்பமயமாதல்புவி வெப்பமயமாதல்
உலக மக்கள் தொகையின் பெருக்கம் காரணமாக, இயற்கை வளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, புதைவடிவ எரிபொருள்களை எரிப்பதால் வெளி மண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
புவி வெப்பமயமாதல் பிரச்சினை என்பது நிச்சயமாக ஒரு இரவில் நடந்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. இந்த பூமியில் கொஞ்சம், கொஞ்சமாக வெப்பம் அதிகரித்ததன் காரணமாக இந்தப் பிரச்சினை உருவாகி வருகிறது. குறிப்பாக, கடந்த ஒரு நூற்றாண்டில் புவி வெப்பமயமாதல் பிரச்சினை மிகுதியாக இருக்கிறது. நம்மை எச்சரிப்பதாகவும் அது அமைந்துள்ளது.
உலக மக்கள் தொகையின் பெருக்கம் காரணமாக, இயற்கை வளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, புதைவடிவ எரிபொருள்களை எரிப்பதால் வெளி மண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பூமியின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க பனி பிரதேசங்கள் உருகி, பூமியில் கடல் மட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கடல் மட்டம் அதிகரிப்பதினால், கடலோரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் மெல்ல, மெல்ல நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பெரும் மாநகரங்கள் அழியும் நிலையில் உள்ளன.
ஜகார்த்தா, இந்தோனேசியா
ஜாவா கடலுக்கு மிக அருகாமையில் ஜகார்த்தா நகரம் அமைந்துள்ளது. கடல் மட்டம் அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே இங்கு மண் அரிப்பு அதிகமாக உள்ளது. மாநகர மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய நிலத்தடி நீரை மிக அதிகமாக உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் ஜகார்த்தா நகரம் வெகு விரைல் கடலில் மூழ்கும் என்று கூறப்படுகிறது.
நியூயார்க் நகரம், அமெரிக்கா
அட்லாண்டிக் கடல் நீரால் இந்த மாநகரம் சூழப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் கடுமையான புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை இந்நகரம் எதிர்கொண்டுள்ளது. கடல் மட்டம் அதிகரிப்பு மற்றும் இயற்கை சீற்றங்களால், அடுத்த சில ஆண்டுகளில் நியூயார்க் நகரின் பெரும்பகுதி அழிந்து போகும் என்று கருதப்படுகிறது.
மியாமி, அமெரிக்கா
இந்த நூற்றாண்டின் இறுதியில் மியாமி நகரம் கடலுக்குள் மூழ்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நிலத்தடி நீர் மாசடைந்து நஞ்சாக மாறி வருகிறது. அத்துடன், கட்டடங்கள் பல சேதங்களை எதிர்கொண்டு வருகின்றன.
வெனீஸ், இத்தாலி
அதி வேகமாக நீருக்குள் மூழ்கி வரும் நகரமாக வெனீஸ் நகரம் இருக்கிறது. மாநகரில் வெள்ளத்தடுப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாலும், அது போதுமான அளவுக்கு பலன் தரவில்லை.
டாக்கா, வங்கதேசம்
2050ஆம் ஆண்டுக்குள் வங்கதேச தலைநகர் டாக்கா மாநகரின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் கடல் மட்டம் அதிகரிப்பதால் அந்நாட்டின் 70 சதவீத இடங்கள் வெள்ளத்தில் மூழ்க கூடிய வாய்ப்புகள் உள்ளன.
ரோட்டர்டாம், நெதர்லாந்து
ஏறக்குறைய 90 சதவீத பரப்பளவு ஏற்கனவே கடல் மட்டத்திற்கு கீழே தான் இருக்கிறது. வெள்ளத்தை தடுக்க நிறைய நீர் சேமிப்பு கட்டமைப்புகள் இருக்கின்றன என்றாலும், ஓரளவுக்கு மேல் அது பலன் தராது என்று கருதப்படுகிறது.
லாகோஸ், நைஜீரியா
இந்நாட்டின் மிகப் பெரிய நகரமான லாகோஸ் நகரில் மண் அரிப்பு மிக அதிகமாக உள்ளது. கடலோரத்தில் வாழும் மக்கள் தொகையை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று தெரிவிக்கப்படுகிறது.
பாங்காக், தாய்லாந்து
ஓராண்டுக்கு ஒரு செ.மீ. என்ற அளவில் இந்த நகரம் ஏற்கனவே மூழ்கிக் கொண்டிருக்கிறது. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடலுக்குள் மூழ்கும் அபாயம் மிக அதிகமாக இருக்கிறது.