இறந்த கணவர்; இரண்டு ஆண்டுகளுக்கு பின் குழந்தை! – பிரிட்டன் மனைவியின் நெகிழ்ச்சி
24 Jun,2022
பிரிட்டனில் கணவர் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அவரது குழந்தையை மனைவி பெற்றெடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் லாரன் மெக்ரேகர் என்ற பெண். இவருக்கும் கிரிஸ் மெக்ரேகர் என்ற நபருக்கும் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக திருமணமான நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். குழந்தை ஆசையில் இருந்து வந்த இருவருக்கும் இடியாக வந்தது அந்த செய்தி.
கிரிஸ் மெக்ரேகருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் அந்த காதல் கணவர் கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். கணவரின் மேல் காதல் கொண்ட லாரன் அவரது குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என தீவிரமாக இருந்ததால் அவரது உயிரணுவை சேமித்து வைத்திருந்துள்ளார்.
பின்னர் அதை வைத்து IVF என்னும் சிகிச்சை மேற்கொண்டு கர்ப்பமடைந்துள்ளார். அவருக்கு சில மாதங்கள் முன்னதாக குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் லாரன் தன் குழந்தை மற்றும் கணவர் படத்துடன் இட்டிருந்த பதிவு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.