கணவரை கொல்வது எப்படி' - கட்டுரை எழுதிய எழுத்தாளருக்கு கணவரை கொன்ற குற்றத்திற்கு ஆயுள் தண்டனை
15 Jun,2022
உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி என்ற கட்டுரை எழுதியுள்ள அமெரிக்க எழுத்தாளர், தனது கணவரை கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக்கு ஆளாகியுள்ளார். இந்த பரபரப்பு கொலை வழக்கிற்கான தீர்ப்பை அமெரிக்காவின் ஓரேகான் மாகாண நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. அமெரிக்காவின் 71 வயதான நான்சி கிராம்ப்படன் என்ற எழுத்தாளர் தனது கணவரை கொலை செய்த புகாரில், அவர் மீதான வழக்கு விசாரணை ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.
இவரது கணவர் டேனியல் ப்ரோபி 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணியிடத்தில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவர், கொலை தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தும் போது, இவரது மனைவியின் மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், எழுத்தாளர் அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு காரில் சென்று வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்த காவல்துறைக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் இவர்தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்சி இ-பே இணையதளம் மூலம் துப்பாக்கி வாங்கி இந்த கொலையை செய்துள்ளார்.
இதில் முக்கிய திருப்புமுனையாக இந்த எழுத்தாளர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி எனக் கட்டுரை எழுதியுள்ளார். இந்த தம்பதிக்கு பொருளாதார ரீதியான நெருக்கடி நீண்ட காலமாக இருந்ததாகவும், கணவர் உயிரிழந்தபின் கிடைத்த காப்பீட்டு தொகையை பல்வேறு தேவைகளுக்கு எழுத்தாளர் நான்சி பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை வழக்கில் நான்சி குற்றவாளி என்பது உறுதியான நிலையில், இவருக்கு 25 ஆண்டு காலம் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வயது மூப்பின் காரணமாக நான்சிக்கு பரோல் வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.