துபாய் உள்பட ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் முக்கியமான வருமானம் கச்சா எண்ணெய் என்பதும் அந்த ஒரே ஒரு வருமானத்தின் மூலம் அந்நாடுகள் பெரிய அளவில் பொருளாதாரத்தில் முன்னேறியது என்பதும் தெரிந்ததே.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் பாரம்பரியமாக அதன் பொருளாதார வளர்ச்சிக்கு எண்ணெயை மட்டுமே நம்பியிருந்த நிலையில் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக எண்ணெய் தவிர மாற்று வணிகத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் தற்போது உலகம் முழுவதும் நடமாடத் தொடங்கிவிட்டதை அடுத்து எண்ணெயின் தேவை ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு நின்று விடும் என்ற அபாயத்தை கணக்கில் கொண்டு ஐக்கிய அரபு நாடுகள் இப்போதே சுதாரித்து வருகின்றன.
குறிப்பாக துபாய் புதுமைகளின் அதிகார மையமாக உருவாகி வருகிறது என்பதும் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட இந்த நாடு எண்ணெய் விற்பனை ஒருவேளை நின்று போனாலும் தன்னம்பிக்கையை நோக்கி நகரும் தைரியமான நாடாக உருவாகி வருகிறது.
சமீபத்தில் நடந்த துபாய் எக்ஸ்போ ஏராளமான தொழிலதிபர்களை கவர்ந்தது என்பதும் எண்ணெய் தவிர மற்ற வணிகத்திற்கு தாங்கள் தயாராக இருப்பதை இந்த எக்ஸ்போ வெற்றியின் வெற்றி மூலம் அனைத்து நாடுகளுக்கும் துபாய் சுட்டிக்காட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அஹ்மத் அல் ஜெயோதி. அல் சியோடி அவர்கள் கூறியபோது, 'நாங்கள் ஒரு புதிய இலக்கை உருவாக்கும் நோக்கத்தில் இருக்கிறோம், மேலும் தன்னம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவு சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் புதுமையான நடைமுறைகளை செயல்படுத்த இருப்பதாகவும், இதுவே எங்கள் நாட்டின் முதுகெலும்பாகும்' என்று கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகள் 2012ஆம் ஆண்டிலேயே 12% ஆக இருந்தது என்றும், அது 2021ஆம் ஆண்டில் 19% ஆக படிப்படியாக அதிகரித்துள்ளன என்றும், இது எண்ணெயை அதிகமாகச் சார்ந்திருப்பதில் இருந்து விலகுவதைக் குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கும் துபாய், உண்மையில் எண்ணெய் அல்லாத ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் துபாயின் எண்ணெய் அல்லாத வெளிநாட்டு வர்த்தகத்தின் அளவு 10% உயர்ந்து 48 மில்லியன் டன்களாக இருந்தது. அதேபோல் ஏற்றுமதிகள் 30.8% உயர்ந்து 10.1 மில்லியன் டன்களாக இருந்தது என்பதும், மறு ஏற்றுமதி 7 மில்லியன் டன்கள் என அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டிபி வேர்ல்ட் குரூப் சேர்மன் & சிஇஓ மற்றும் துறைமுகங்கள், சுங்கம் மற்றும் ஃப்ரீ ஸோன் டிரேட் கார்ப்பரேஷனின் தலைவர் சுல்தான் பின் சுலேயம் அவர்கள் கூறியபோது, 'துபாய் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் திட்டமிடலின் அடிப்படையில் சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் துபாயின் திறனை இந்த வளர்ச்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது ஏற்றுமதி, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் அடுத்த 9 ஆண்டுகளில் நாட்டிற்கு வரும் முதலீட்டை 1 டிரில்லியன் டிரில்லியன்களாக அதிகரிக்க விரும்புவதாக அறிவித்துள்ளது. துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி நாட்டின் கூட்டு இலக்குகளை அடைவதில் பல புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்துகிறது.
தற்போதுள்ள கடல் மற்றும் வான்வழி வலையமைப்பின் மூலம் உலகெங்கிலும் 200 புதிய நகரங்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்துதல், இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட 8 நாடுகளுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தங்களே எங்கள் அடுத்த இலக்கு என துபாய் தெரிவித்துள்ளது.