:
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ரஷ்யா போன்ற தூர தேசங்களில் இருந்து பறவைகள் கூட்டம் கூட்டமாக வருவதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால், பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தற்கொலை செய்யும் இடத்தை பற்றி கேள்வி பட்டிருக்கீர்களா? அதுவும் வெளிநாடுகளில் அல்ல நமது இந்தியாவில் தான் அந்த இடம் உள்ளது.
என்ன நம்ப முடியவில்லை அல்லவா.?
ஆம், இந்தியாவில் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாதிங்கா கிராமத்திற்கு தான் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்தில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தற்கொலை செய்து கொள்வது உண்டு.
இங்கு வரும் பறவைகள் போரைல் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஜாதிங்கா கிராமத்தில் தற்கொலை செய்துகொள்வதற்காக வருவதால் இந்த இடமானது 'பறவைகளின் தற்கொலை பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது.
இந்த பறவைகளின் தற்கொலை நிகழ்வானது கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது.
'பறவைகளின் தற்கொலை பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படும் இந்த கிராமத்தில் 1-2 என்று இல்லை அதிக எண்ணிக்கையிலான பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றன.
இங்கு உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வரும் புலம்பெயர் பறவைகளும் தற்கொலை செய்து கொள்கின்றன என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
எப்படி பறவைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றன?
பொதுவாக தற்கொலை தொடர்பான பேச்சுக்கள் மனிதர்களிடம் மட்டுமே காணப்படும். ஆனால் விலங்குகளில் இது மிகவும் ஆச்சரியமான நிகழ்வாகத் இருக்கிறது.
அங்குள்ள கிராமவாசிகளின் கூற்றுப்படி பறவைகள் மிக அதிக வேகத்தில் பறந்து வந்து அங்குள்ள கட்டிடங்கள் அல்லது மரங்களில் மோதுகின்றன. வேகமாக மோதுவதால் பறவைகளால் பறக்கக் கூட முடியாமல் மிகவும் காயமடைந்து இறக்கின்றனர்.
செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதுவும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை பறவைகள் இங்கு வந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றன. மீதி நாட்கள் எல்லாம் பறவைகள் அனைத்தும் வானில் பறந்து கொண்டே இருக்கின்றனர்.
இந்த மர்மமான நிகழ்வுக்கான காரணம் என்ன?
ஆண்டுதோறும் 40 வகையான உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் இங்கு தற்கொலை செய்து கொள்கின்றன. இயற்கை காரணங்களால் ஜாதிங்காவானது பிற நகரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்திற்குள் இரவில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மர்மமான நிகழ்வுக்கு அதிக காந்த சக்தியே காரணம் என பறவை இன ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அதாவது இங்கு காந்த சக்தி மிக அதிகமாக இருக்கிறது என்றும், பனிமூட்டம் நிறைந்த பருவத்தில் இங்கு காற்று மிக வேகமாக வீசும் என்றும் நம்பப்படுகிறது. இதன் காரணமாக, பறவைகள் ஒளி அதிகமுள்ள இடத்திற்கு அருகில் பறக்கின்றன.
போதிய வெளிச்சமின்மையால், தெளிவாகப் பார்க்க முடியாமல், வீடுகள், மரங்கள், வாகனங்களில் மோதி இறக்கின்றன என்கிறார்கள்.
மேலும் இந்த கிராமத்தில் சில தீய சக்திகள் இருப்பதாகவும் கிராம மக்கள் நம்புகிறார்கள், அது பறவைகளை இங்கு வாழ விடாது என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்றுவரை இந்த மர்மத்திற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.