தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசம் தொடர்பாக கடந்த சில தினங்களாக ஆதீனங்கள் குறித்து நீங்கள் செய்திகளில் தொடர்ந்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஆதீனங்கள் என்றால் என்ன? அவற்றின் வரலாறு என்ன என்பதை எளிமையாக இந்த கட்டுரை விளக்குகிறது.
ஆதீனம் என்றால் என்ன?
சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஆதீனங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன?
"சைவ சித்தாந்தத்தில் இந்த மடங்களை தோற்றுவித்ததற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்த மடங்களின் முக்கிய நோக்கம் சைவ சித்தாந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவது." என்கிறார் சென்னை பல்கலைகழகத்தின் சைவசித்தாந்த துறையின் தலைவர் முனைவர் நல்லூர் சரவணன்.
தமிழ் வளர்ப்பதே ஆதீனங்களின் நோக்கம் என்கிறார் பேராசிரியர் அருணன்.
முதலில் தோன்றிய ஆதீனம் எது?
முதலில் தோன்றிய ஆதீனம் எது என்பது குறித்து வரலாற்று ரீதியாக பல்வேறு கருத்துகள் உள்ளன.
திருவாவடுதுறை ஆதீனம்தான் முதலில் வந்தது அதிலிருந்துதான் தருமபுரம் ஆதீனம் தோன்றியதாக பேராசிரியர், ஆய்வாளர் அருணன் தெரிவிக்கிறார்.
அதன்பின் அந்த தருமபுர ஆதீனத்திலிருந்து வேறு சில ஆதீனங்கள் தோன்றின என்கிறார் அவர்.
63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இந்த மடத்தை தோற்றுவித்ததாக கூறுகிறார்கள் அதற்கு ஆதாரம் இல்லை என்கிறார் அருணன்.
இவர்களுக்கு உள்ள அதிகாரம் என்ன? ஆதீனங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?
இவர்களுக்கென்று குறிப்பிட்டு எந்த சமூக அதிகாரமும் இல்லை. தமிழ் வளர்க்கும் பணிகளைத்தான் இவர்கள் தொடர்ந்து செய்துவந்தனர் என்கிறார் அருணன்.
இம்மாதிரியாக மடங்களை காப்பதற்காக நிலப்பிரபுக்கள் அல்லது செல்வந்தர்கள் நிலங்களை மடத்தின் பெயரில் எழுதி வைத்தனர்.
அந்த நிலங்களை குத்தகைக்கு விட்டு அதிலிருந்து மடங்களுக்கு வருவாய் வருகிறது. இந்த வருவாயை சில சைவ கோயில்களை பராமரிக்கவும் தமிழ் வளர்ப்பு பணிகளிலும் இவர்கள் செலவிட்டு வந்தார்கள் என்கிறார் அருணன்.
தமிழ் வளர்ப்புக்கும் ஆதீனங்களுக்கு என்ன தொடர்பு?
திருவாவடுதுறை ஆதீனம் போன்ற ஆதீனங்கள் தமிழ் வளர்ப்பு பணியில் குறிப்பிடத்தக்க பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் தருமபுர ஆதீனம் வட மொழி சார்ந்தே இயங்கி வந்ததாக தெரிவிக்கிறார் நல்லூர் சரவணன்.
திருவாவடுதுறையின் பண்டிதராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. பல புராணங்களை எழுதியவராக இருந்தாலும் இவரது சீடராக இருந்தவர்தான் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாதையர்.
உவே.சா பழந்தமிழ் இலக்கியங்களை பதிப்பித்தார். சமய பாகுபாடின்றி பல நூல்களை இவர் பதிப்பித்தார். இதற்கு சமய வேறுபாடுன்றி தமிழ் இலக்கியங்கள் என்பதால், திருவாவடுதுறை ஆதீனமும் உதவியது என்கிறார் அருணன்.
"சைவம் என்பது தமிழ் மரபு சார்ந்து வர்ணாசிரமத்திற்கு உடன்படாமல் திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார் தொடங்கி சாதி மறுப்பில் இயங்கிற்று. சாதி மறுப்புதான் சைவ சித்தாந்தக் கொள்கையாக உள்ளது. அதாவது தமிழை முன்னிலைப்படுத்தி சாதி மறுப்பாக தொடங்கப்பட்ட ஒரு சித்தாந்தமும் அதற்காக தொடங்கப்பட்ட மடங்களும் நாளடைவில் சாதிய கட்டமைப்புக்குள் சிக்கி கொண்டன," என்கிறார் நல்லூர் சரவணன்.
பட்டினப் பிரவேசம் என்றால் என்ன?
ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து மடங்களை சுற்றியுள்ள வீதிகளில் வலம் வருவதுதான் பட்டினப் பிரவேசம்.
அந்த காலத்தில் போக்குவரத்து என்பது குதிரையில் செல்வதாக இருந்திருக்கும். ஆனால் எல்லாரோலும் குதிரையை ஓட்டிச் சென்றுவிட முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கான போக்குவரத்தாக பல்லக்கு இருந்திருக்க கூடும் என்கிறார் அருணன்.
இப்போது பிரச்னை என்ன?
தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிகழ்வு பாரம்பரியமாக வரக்கூடிய ஒரு நிகழ்வு. எனவே இதற்கு தடை விதிக்க கூடாது என ஆதீனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
அதேபோல இந்த நிகழ்வுக்கு அரசு தடை விதித்திருப்பதை மதுரை ஆதீனகர்த்தர் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர். அரசின் நடவடிக்கை சமய சடங்குகளில் தலையிடுவதாகும் என்கிறார்கள் அவர்கள்.
ஆனால் இந்த பட்டினப்பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் இந்த பட்டினப்பிரவேசம் என்ற சடங்கை எதிர்க்கவில்லை. மனிதரை மனிதர்கள் தூக்கி சுமப்பதற்கே தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் மடாதிபதிகள் நவீன வசதிகளுக்கு பழகிக் கொண்டது போல இதையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பட்டினப் பிரவேசம் தொடர்பாக ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.