தீவிர கோவிட்டிலிருந்து மீண்டவர்களுக்கு அடுத்த சிக்கல்: அறிவுத்திறன் குறைப்பாடு ஏற்படுகிறது
04 May,2022
கடுமையான கோவிட் நோய்த்தொற்றிலிருந்து மீண்ட 50 முதல் 70 வயதிற்குட்பட்டவர்கள் அறிவுத் திறன் குறைபாட்டை சந்திப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலை மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் தங்களது ஆய்வின் மூலம் அறிந்ததாக கூறியுள்ளவை: கேம்பிரிட்ஜில் உள்ள ஆடன்புரூக் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று திரும்பிய 46 நபர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. கோவிட் தொற்றிலிருந்து மீண்டு ஆறு மாதங்களான பின்னரும் அதன் விளைவுகள் காணப்படுகிறது.
கோவிட் நீடித்த அறிவாற்றல் மற்றும் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. சோர்வு, குழப்பம், வார்த்தைகளை நினைவுபடுத்துவதில் சிக்கல், தூக்கக் கலக்கம், பதட்டம், அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்தம் ஆகியவற்றை அனுபவித்ததாக கூறியுள்ளனர்.
கணினியில் காக்னிட்ரான் எனும் தளத்தைப் பயன்படுத்தி கோவிட்டிலிருந்து மீண்டு சராசரியாக 6 மாதங்கள் கடந்தவர்களிடம் கணினிமயமாக்கப்பட்ட அறிவாற்றல் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது. நினைவு, கவனம், முடிவெடுப்பது போன்ற மன திறன்களின் வெவ்வேறு அம்சங்களை அளவிட்டோம். கோவிட் பாதிக்காதவர்களை விட கோவிட்டிலிருந்து பிழைத்தவர்கள் துல்லியம் குறைவாகவும், மெதுவாகவும் பதில் அளித்தனர்.
செயற்கை சுவாம் தேவைப்பட்டவர்களிடம் இந்த தாக்கம் வலுவாக இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நோய்வாய்ப்படாத நோயாளிகள் கூட லேசான குறைபாட்டின் அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம். அறிவாற்றல் இழப்பின் அளவு 50 முதல் 70 வயதினருக்கு ஐ.க்யூ அளவில் 10 புள்ளிகள் அளவுக்கு இருந்தது. டிமென்ஷியா, முதுமை போன்ற பலவிதமான நரம்பியல் கோளாறினால் அறிவாற்றல் குறைபாடு ஏற்படுவது பொதுவானது. ஆனால் கோவிட் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது. இவ்வாறு கூறியுள்ளனர்.