இரகசியமாக இரு குழந்தைகளுக்குத் தந்தையான புட்டினின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய அறிக்கை
03 May,2022
உக்ரேன் மீது படையெடுப்பை மேற்கொண்டு மூன்றாம் உலகப் போரொன்று கிளர்ந்தெழும் அபாய நிலையைத் தோற்றுவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடற்பயிற்சி வீராங்கனையான தனது காதலி மூலம் இரகசியமாக இரு குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை வெளியான புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
சுவிட்ஸர்லாந்தின் சொன்டக்ஸ்ஸெய்டங் பத்திரிகையால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு மூலம் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
விளாடிமிர் புட்டின் தன்னை விட மிகவும் வயது குறைந்தவரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தனது நாட்டின் உடற்பயிற்சி விளையாட்டு வீராங்கனையுமான அலினா கபேயவாவுடன் காதல் தொடர்பைக் கொண்டிருந்தமை தொடர்பில் ஏற்கனவே வதந்திகள் பரவி வந்தமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
இந்நிலையில் அலினாவின் நண்பரும் மேற்படி இரு பிரசவங்களையும் பார்த்த மகப்பேற்று மருத்துவரை அறிந்தவருமான ஒருவர் மூலம் புட்டினுக்கு இவ்வாறு இரகசியமாக இரு ஆண் குழந்தைகள் பிறந்தமை அம்பலமாகியுள்ளது.
அவருக்கு மேற்படி காதல் தொடர்பு மூலம் கருத்தரித்த முதலாவது ஆண் குழந்தை 2015 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் இத்தாலிய மொழி பேசும் திசினோ பிராந்தியத்திலுள்ள கிளினிக்கா சான்ட்அனா மருத்துவமனையில் கடும் பாதுகாப்பின் கீழ் இரகசியமாக பிறந்துள்ளது.
மேற்படி மருத்துவமனையானது சோவியத் ஒன்றிய காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய புட்டினின் நண்பர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்துள்ளது.
அதேசமயம் புட்டினின் இரண்டாவது மகன் 2019 ஆம் ஆண்டு மொஸ்கோவிலுள்ள மருத்துவமனையில் அதே மகப்பேற்று மருத்துவ நிபுணரின் உதவியுடன் பிறந்துள்ளான்.
தற்போது 70 வயதான புட்டின் அலினாவுடன் (தற்போது 38 வயது) தனக்கு இருப்பதாக கூறப்படும் காதல் தொடர்பை 2007 ஆம் ஆண்டிலிருந்து மறுத்து வருகிறார்.
இந்நிலையில் அலினாவுக்கும் புட்டினுக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும் அலினாவுக்கு புட்டினைத் தவிர வேறு எவருடனும் காதல் தொடர்பு கிடையாது எனவும் மேற்படி இரகசியத்தை அம்பலமாக்கிய நபர் வலியுறுத்தியுள்ளதாக புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
1983 ஆம் ஆண்டு லயுட்மிலா ஷக்ரெப்னேவா என்பவரை திருமணம் செய்த விளாடிமிர் புட்டின், 2014 ஆம் ஆண்டில் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றிருந்தார்.
புட்டினுக்கு லயுட்மிலா மூலம் மரியா (37 வயது) மற்றும் கத்தரினா (35 வயது) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகளான கலாநிதி மரியா வொரோன்ட்சோவா அலினாவை விட ஒரு வயது மட்டுமே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.