மக்கள் வெளியேற அனுமதி மறுப்பு- ரஷ்யா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் உக்ரைன்
14 Mar,2022
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 3 வாரங்களை கடந்துள்ளது. கிழக்கு-மத்திய நகரமான டினிப்ரோ மற்றும் மேற்கு லுட்ஸ்க் மற்றும் இவானோ-ஃபிரான்கிவ்ஸ்கில் உள்ள விமான நிலையங்கள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துகின்றன. செர்னிவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய நகரங்கள் ஏற்கனவே சுற்றி வளைக்கப்பட்டு, தொடர்ந்து ஏவுகணைகளை வீசுவதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
மரியுபோல் நகரின் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதை, ரஷ்ய ராணுவம் தடுப்பதாக உக்ரைன் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. முற்றுகையிடப்பட்ட நகரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் உறைபனியால் சிரமப்படுகின்றனர். உணவு மற்றும் நீருக்கும் கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ரஷ்யா, பரிந்துரைக்கப்படும் மனிதாபிமான வழித்தடங்களுக்கு உக்ரைன் அனுமதி மறுப்பதாக விளக்கம் அளித்துள்ளது.
மரியுபோலில், பள்ளிவாசல் ஒன்றில் துருக்கியைச் சேர்ந்தவர்கள் உள்பட 80 பேர் தஞ்சமடைந்திருந்த நிலையில், அதன் மீது தாக்குல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். மெலிடோபோல் நகரில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்து உதவி செய்து வந்த அந்நகர மேயர் இவான் பெடோரோவ் ரஷ்ய படைகள் கடத்தி சென்றுவிட்டதாக அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார். மேயரை சிறை பிடித்து அழைத்து செல்வது போன்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இதனிடையே, உக்ரைன் மீதான போருக்கு செல்ல தங்களது மகன்களுக்கு அனுமதி வழங்க கூடாது என ரஷ்ய தாய்மார்களை அதிபர் செலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். இளைஞர்களை கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்துவதாக கடந்த புதன் கிழமை ரஷ்யா ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து அதிபர் செலன்ஸ்கி, இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.