ரஷ்ய உரிமையாளரின் கப்பலை கவிழ்க்க முயற்சித்த உக்ரைன் இன்ஜினியர்
02 Mar,2022
இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும்போது இரு தரப்பிலும் உள்ள மக்கள் தங்கள் அரசுக்கு ஆதரவாக இருப்பது இயல்பு தான். ஆனால், எதிரி நாட்டில் உள்ள பொதுமக்கள் தாக்கப்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளை நோக்கி ஏவுகணைகள் வீசப்படுகின்றன.
இதனால், உக்ரைன் மக்கள் அனைவரும் ரஷ்யா மீது கடும் கோபத்தில் உள்ளனர். ரஷ்யாவின் போர் டாங்கி ஒன்றை, உக்ரேனைச் சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் தனிநபராக நின்று மறித்த சம்பவம் கூட நிகழ்ந்தது. தற்போது, உக்ரைன் இன்ஜினியர் ஒருவர் செய்த பழிக்குப் பழி காரியம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.
ரஷ்யாவின் ஹெலிகாப்டர் கார்ப்பரேஷன் தலைவராக பணியாற்றிய நபரான அலெக்ஸாண்டர் மிஜீவ்-க்கு சொந்தமாக சொகுசு கப்பல் ஒன்று உள்ளது. இவர் அரசுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்யும் ஆயுத உற்பத்தி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரது சொகுசு கப்பலில் உக்ரேனைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் டாரஸ் ஆஸ்டாபக் பணியாற்றி வருகிறார். தற்போது ஸ்பெயின் நாட்டில் நிலை கொண்டுள்ள அந்த சொகுசு கப்பலை இவர் கவிழ்க்க முயற்சி செய்ததாக ‘தி டெய்லி டெலிகிராஃப்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சொகுசு கப்பலின் பெயர் லேடி அனஸ்தாசியா ஆகும். இதன் மதிப்பு 7 மில்லியன் யூரோக்கள். அதாவது இந்திய மதிப்பில் ரூ.59 கோடி ஆகும். கப்பலை உக்ரைன் இன்ஜினியர் கவிழ்க்க முயற்சித்தபோது அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்பெயின் அதிகாரிகள் இன்ஜினியரை கைது செய்தனர். அப்போது, தன்னுடைய பாஸ் அலெக்ஸாண்டர் மிஜீவின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் தான் உக்ரைன் மக்களை கொல்லப் பயன்படுகிறது என்றும், கப்பலை கவிழ்க்க முயற்சி செய்ததற்காக தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்றும் அந்த இன்ஜினியர் கூறியுள்ளார்.
சொகுசு கப்பலில் உள்ள முக்கிய பகுதியின் வால்வை அவர் திறந்து விட்டுள்ளார். கப்பலை அப்படியே விட்டுவிட்டு எல்லோரும் வெளியேறுங்கள் என்று சக ஊழியர்களிடம் இன்ஜினியர் தெரிவித்தார். ஆனால், அங்கிருந்த பணியாளர்களும் உக்ரேனியர்கள் தான். அவர்கள் இன்ஜினியரின் முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை. மாறாக, கப்பல் மூழ்குவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ஸ்பெயின் நீதிமன்றம் இன்ஜினியரை பெயிலில் செல்ல அனுமதித்தார். கப்பலை கவிழ்க்கும் முதல் முயற்சி தோல்வி அடைந்தாலும், இரண்டாம் முயற்சியாக தாய் நாடு திரும்பி ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிய உள்ளதாக அங்குள்ள செய்தியாளர்களிடம் கூறினாராம் அந்த இன்ஜினியர்.