அறிவியல் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் பெண்களுக்கு சாமி வருவது, பேய் பிடிப்பது போன்ற `அசாதாரண’ கட்டுக்கதைகள் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. சில நாள்களுக்கு முன்னால், கர்நாடகாவைச் சேர்ந்த 3 வயதுப் பெண் குழந்தைக்குப் பேய் ஓட்டுகிறேன் என்று பிரம்பால் அடித்தே கொன்றிருக்கிறார்கள். சாமி வருவதற்கும் பேய்
பிடிப்பதற்கும் பின்னணியில் இருக்கிற உளவியல் காரணங்கள், தீர்வுகள் பற்றி மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் பேசினோம்.
“பேய் பிடித்தல் என்பது மனநோய்தான். ஆனால், இந்தப் பிரச்னை வந்தவர்களை முதலில் ஆன்மிகத் தலங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, கடைசியாகத்தான் மனநல மருத்துவர்களிடம் அழைத்து வருவார்கள். அப்படி வருகிறவர்களிடம், `உங்களுக்கு நம்பிக்கையான ஆன்மிகத் தலங்களுக்கு தாராளமாக அழைத்துச் செல்லுங்கள். ஆனால், அங்கு வேண்டுதல் செய்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவர்களை அடிக்கக் கூடாது’ என்று சொல்லி அனுப்புவோம். பாவம் அந்தக் குழந்தை” என்று வருத்தப்பட்டவர், இந்தப் பிரச்னைகளுக்கான காரணங்கள், தீர்வுகள் குறித்துப் பேச ஆரம்பித்தார்.
பேய் பிடித்தல்’ பிரச்னை இருப்பவர்களுக்கு, யாருமே இல்லாத இடத்தில் யாரோ அவர்களிடம் பேசுவது போன்ற உணர்வு காதுக்குள் குரல்கள் கேட்பது போன்றவை ஏற்படும். இந்த உணர்வுகளை அவர்கள் உண்மை என்றும் நம்புவார்கள். இவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை தருவதுதான் சரியான தீர்வு.
அடிக்கடி பெற்றோர் சண்டையிடுவதைப் பார்ப்பதாலும், பெற்றோரிடம் அடிக்கடி அடி வாங்குவதாலும் மன அழுத்தத்துக்கு ஆளாகிற குழந்தைகளும் சில நேரத்தில். அசாதாரணமாக நடந்துகொள்வார்கள். இதை பேய் பிடித்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு மருத்துவர்களிடம் அழைத்து வருவார்கள்.
ஆன்மிகத்தில் ஆழமான நம்பிக்கை இருப்பதால் எனக்கு சாமி வரும் என்று நம்புவதும், குடும்பத்தில் வேறு யாருக்காவது சாமி வருவதைப் பார்த்தவர்கள் எனக்கும் இப்படி வரும் என்று அழுத்தமாக நம்புவதுதான் சாமியாடுவதற்கு முக்கியமான காரணங்கள். ஒரு சிலர் மற்றவர்களுடைய கவனத்தைத் தம் பக்கம் திருப்புவதற்காகவும் இப்படிச் செய்யலாம். வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது, ஏதோ ஓரிரு நாள் சாமி வருவது, அருள் வாக்கு சொல்வது, மற்ற நாள்களில் நார்மலாக இருப்பது என்று இருப்பவர்களுக்கு சிகிச்சையே தேவையில்லை. இதை மனநல மருத்துவர்கள் மனநோய் என்றே எடுத்துக்கொள்வதில்லை. அதை அவர்களுடைய நம்பிக்கை என்று விட்டு விடுவோம். ஆனால், அருள்வாக்கு சொல்கிறேன் என்று மற்றவர்களை தொல்லை செய்பவர்களுக்கு, சிகிச்சை அளிக்கத்தான் வேண்டும்.
குழந்தைகளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று அழைத்து வருவார்கள். இதற்குப் பரம்பரை ரீதியாக வருகிற மனநோய், வெளிப்புற காரணிகளால் வருகிற ஸ்ட்ரெஸ், பெற்றோர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஃபிட்ஸ் வந்ததுபோலும், மயக்கம் போட்டு விழுவதுபோலும் செய்வது என மூன்று காரணங்கள் இருக்கின்றன. பரம்பரைரீதியாக வரும் மனநோயில், அவர்களை யாரோ தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதைப்போல, அவர்களிடம் யாரோ பேசுவதுபோல, உடம்பில் பூச்சி ஊர்வதுபோல உணர்வார்கள். இது குழந்தைக்கு குழந்தைக்கு மாறுபடும். பெரும்பாலும் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே இந்தப் பிரச்னை வருகிறது. இவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சையளிக்க வேண்டும்.
அடிக்கடி பெற்றோர் சண்டையிடுவதைப் பார்ப்பதாலும், பெற்றோரிடம் அடிக்கடி அடி வாங்குவதாலும் மன அழுத்தத்துக்கு ஆளாகிற குழந்தைகளும் சில நேரங்களில் அசாதாரணமாக நடந்துகொள்வார்கள். இதை பேய் பிடித்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு மருத்துவர்களிடம் அழைத்து வருவார்கள். இந்தக் குழந்தைகளை மனம் விட்டுப் பேச வைத்து, அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்த்து வைத்தாலே இரண்டு வாரங்களிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நார்மலாகிவிடுவார்கள்.
அடுத்தது, பெற்றோரின் கவனத்தைத் தன் பக்கமாக ஈர்ப்பதற்காக, சாப்பிடாமல் இருப்பது, தூங்காமல் இருப்பது ஆகியவற்றில் ஆரம்பித்து, மயங்கி விழுவது வரை அசாதாரணமாக நடந்துகொள்வார்கள். குறிப்பாக, பெற்றோரின் கவனம் இரண்டாவது குழந்தை மீது திரும்பும்போது, முதல் குழந்தை இப்படி நடந்துகொள்ளும். இந்தக் குழந்தைகளைப் பரிசோதித்துப் பார்த்தால், உடலளவில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இதை கன்வர்ஷன் டிஸ்ஆர்டர் என்போம். இவர்களை உளவியல் நிபுணரிடம் அழைத்துச்சென்றால், பெற்றோரின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்புவதற்காக அசாதாரணமாக நடந்துகொள்கிறார்களா அல்லது உண்மையிலேயே பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்” என்கிறார் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா