உக்ரைன் பிரச்னையை சுமுகமாக தீர்க்க ரஷ்யா சம்மதம்
20 Feb,2022
உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் திடீர் திருப்பமாக பிரான்சின் சமாதான முயற்சிக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் உடனான பிரச்னையை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும்.
ஆனால், எல்லை பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை தொடர்ந்து குவித்து வருகிறது. ஏற்கனவே நிறுத்தப்பட்ட படைகள் எதுவும் திரும்பப் பெறப்படாமல் இருக்கின்றன. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போர் வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்திருப்பதாக அமெரிக்கா கூறியிருந்தது.
உக்ரைனில் போர் மேகங்கள் சூழ்ந்ததை தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டிருந்தன. இதற்கிடையே, பிரச்னையை சுமுகமாக தீர்ப்பதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முயற்சி மேற்கொண்டுவந்தார்.
இந்த முயற்சியும் தோல்வியை தழுவியதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று 105 நிமிடங்களாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உக்ரைன் பிரச்னையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
முதற்கட்டமாக பெலாரஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெறுவதற்கு ரஷ்ய அதிபர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக உக்ரைன், ரஷ்யா மற்றும் அவற்றின் நலன் விரும்பு நாடுகள் கொண்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் இரு தரப்பு பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கிடையே உக்ரைன் உடனான மோதலை ரஷ்யா தவிர்க்க வேண்டும் என்பதற்காக, ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எந்நேரமும் சந்தித்து பேசலாம் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.