சுதன்ராஜ்
உலக மக்களிடத்தில் பல்வேறு நம்பிக்கைகள் உண்டு. அதில் 13ஆம் எண் தொடர்பில் அச்சரேகை பரவலாக பலரிடத்தில் காணப்படுகின்றது. 13ஆம் தேதியை ஒரு கெட்ட நாளாகக் கருதுகின்ற நிலை இன்னமும் உண்டு.
இந்நாளில் நல்ல காரியங்களை தவிர்த்துக் கொள்ளுதல், வீட்டைவிட்டு வெளியே வராமல் இருத்தல், வேலைக்கு விடுமுறை எடுத்தல் என்று இந்நாளுக்கு அச்சப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.
குறிப்பாக 13ஆம் திகதி என்பது வெள்ளிக்கிழமையில் வந்தால் இந்த அச்சம் தலைக்கு மேலே ஏறிவிடும்.
காரணம் இயேசு கிறிஸ்து இறுதியாக சாப்பிட்ட இரவு உணவு ‘Last Supper’ என்று கூறப்படும் இந்த விருந்தில் 13 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்றும், அன்றைய நாள் வெள்ளிக்கிழமை என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை இயேசுவைக் காட்டி கொடுத்த யூதாஸ் என்பவரும் இந்த விருந்தில் கடைசி நபராக அதாவது 13ஆவது விருந்தாளியாக கலந்து கொண்டார் என்றும் கத்தோலிக்க மக்களால் நம்பப்படுகிறது.
இந்நிலையில்தான், 13ஆம் எண் தொடர்பான அச்சரேகை படர்ந்துள்ளதோடு, பல நாடுகளில் அடுக்குமாடி கட்டிடங்களில் 13ஆவது மாடி இருக்காது என்பதோடு, பிரபலமான இடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்கள் 13ஆம் எண்ணில் இருக்காது காணப்படுகின்றது.
இருப்பினும் சில நாடுகளில் “வெள்ளி 13” அதிர்ஷ்டம் என்ற பெயரில் 13ஆம் திகதியில் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் பல மில்லியன் பணத்தொகையுடன் லொத்தர் குழுக்கப்பட்டும் வருகின்றது.
இவ்வாறு 13ஆம் எண் அச்சத்துக்குரியதும், அதிர்ஷ்டத்துக்குரியதுமான ஓர் உலகோட்டம் உள்ள நிலையில், இலங்கைத் தீவினை மையபடுத்திய இலங்கை-இந்திய சமகால விவகாரத்தில் “13” பேசுபொருளாக மாறியுள்ளது.
அதாவது 13ம் திருத்தச்சட்டம் தொடர்பிலான விடயமே அது. “13”ஆல் யாருக்கு அபாயம் ? யாருக்கு அதிர்ஷ்டம் ? என்ற வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
தமிழர்கள் விடயத்தில் இந்தியாவை தலையீடு செய்வற்கான வழியாக, 13ஆம் திருத்தச் சட்டத்தை இந்தியாவிடம் கூட்டுக்கோரிக்கையொன்றை முன்வைக்க இருப்பதாக தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம்,
இறுதியில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக 13ஆம் திருத்தச்சட்டத்தை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியாவை தலையீடு செய்யக்கோருவதாக வந்து நிற்கின்றது அல்லது தோற்றப்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது.
உண்மையில், ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தலையீடு செய்வதற்கு “13” அவசியமா என்ற கேள்வி உள்ளது ?
அடிப்படையில் 13ம் திருத்தச் சட்டம் என்பது ஓர் உள்நாட்டுச் சட்டமாக உள்ளது. இதனை நடைமுறைப்படுத்து என்று கூறுவதற்கு எந்தவொரு வெளித்தரப்புக்கும் அதிகாரம் இல்லை. ஐ.நா. மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் இது உள்ளடக்கப்பட்டாலும், அதனை தீர்மானிக்கின்ற தரப்பாக சிறிலங்கா மட்டுமே உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு பயணம் செய்திருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய ஊடகமொன்று வழங்கிய கூற்று இதனை கோடிட்டுக் காட்டியுள்ளது.
அதாவது “கடந்த காலத்தில் இந்தியா இவ்விடயத்தில் ஆர்வம் காட்டியது. ஆனால் பிரதான பொறுப்பு, வெளிப்படையாக இலங்கைக்கே உள்ளது.
இலங்கை அரசியல் கட்சிகள் முதன்மையாக இலங்கை அரசாங்கத்துடன் ஈடுபட வேண்டும்” என்பதே அவரின் கூற்று.
அவ்வாறெனில் ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தலையீட்;டுக்கு எதுவழியென்ற கேள்விக்கு “இலங்கை-இந்திய ஒப்பந்தமே” பதிலாக உள்ளது. 13 அல்ல.
சர்வதேச நியமங்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச ஒப்பந்தம் இதுவென்ற வகையில் இதன்வழி, தமிழர்கள் விடயத்தில் இந்தியா தலையீடு செய்ய முடியும்.
இலங்கைதீவின் வடக்கு- கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம் என இந்த ஒப்பந்தம் கீகரித்துள்ளது. இதில் உறுதிசெய்யப்பட்ட தமிழர் தாயகத்தை நிலஅபகரிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள் அரித்துச் செல்கின்றதன் அடிப்படையில் இந்தியா இவ்விடத்தில் தலையீடு செய்யலாம்.
ஆனால் அதற்கான விருப்பு இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் இல்லை என்றே தெரிகின்றது.
ஜீ.எல்.பீரிசின் இந்திய பயணத்தின் போது கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் “ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களிற்கு சமத்துவம் நீதி சமாதானம் கௌரவம் ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதே இலங்கையின் நலனிற்கு உகந்த விடயம்” என வழமையான பல்லவியை பாடியுள்ளதோடு, “இதற்கு அதிகாரப்பரவல் மிக முக்கியமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நலன் என்பது தமிழர் தேசத்தின் நலனில் தங்கியுள்ளது என்பதனை இந்தியா இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றதா என்ற கேள்வியே அமைச்சர் ஜெய்சங்கரின் கூற்றில் எழுகின்றது.
இந்தியாவின் பாதுகாப்பு நலன் என்பது தமிழர் தேசத்தின் நலனில்தான் தங்கியுள்ளது. தமிழர் தேசம் வலுவிழக்கும் எனில், அதன் தாக்கம் இந்தியாவுக்கு பாதகமாக இருக்கும் என்பதனை சமீபத்தில் யாழப்பாணத்துக்கு பயணம் செய்த சீனத்தூதரின் செயற்பாட்டின் ஊடாக கவனித்துக் கொள்ளலாம்.
தமிழ்மக்களின் மனங்களில் சீனா இடம்பிடிக்க விரும்பியிருப்பின் “முள்ளிவாய்க்காலுக்கு” சென்றிருக்க வேண்டும்.
ஆனால் மாறாக வட பகுதி மீனவர்களுக்கு உதவிகளை புரிந்திருப்பதானது “இந்தியாவுக்கு” மறைபொருளாக சொல்லப்பட்ட செய்தியாகவே கவனிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு “இலங்கையின் நலன்” குறித்து கரிசனை கொண்டுள்ள இந்திய தரப்பு தமிழர் தேசத்தின் நலனே, தனது நலனிற்கு உகந்தது என்பதனை உணரும் காலம் விரைவில் வரலாம். அவ்வாறு “வருவதற்கு” இந்தியாவுக்கு இலங்கை-இந்திய ஒப்பந்தமோ, 13றோ தேவையில்லை.
சமீபத்தில் ஊடகமொன்று செவ்வி வழங்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் கருத்துக்கள் இவ்விடயத்தில் முக்கியமான செய்திகளை சொல்லி நிற்கின்றது.
“1983 யூலை இனப்படுகொலையின் போது நரசிம்மராவ், 1983 நொவம்பரில் ஜீ.பார்த்தசாரதி, 1985 ரொமேஸ் பண்டாரி, 1986ல் சிதம்பரம் என இத்தலையீடுகள், 13 யைக் காட்டியோ அல்லது இலங்கை-இந்திய ஒப்பந்த்தை காட்டியோ நிகழவில்லை.
இவை யாவுமே இதற்கு முன்னராக நிகழ்ந்தவை” எனக் குறிப்பிடும் வி.உருத்திரகுமாரன், அண்மையில் நேபாளத்தில் மதாசி தொடர்பாக இந்தியா அழுத்தம் கொடுத்தமை உள்நாட்டு சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது சர்வதேச ஒப்பந்ததின் அடிப்படையிலோ நிகழ்ந்தது அல்ல என குறித்துரைக்கின்றார்.
பங்களாதேஸ் விடயத்தில் இந்தியா தலையிட்டமை உள்நாட்டு சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ நிகழ்ந்தது அல்ல.
மாறாக பரிகாரநீதியின் அடிப்படையிலே தனது தலையீடுகள் அமைந்தன என இந்தியா ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கூறியது.
இதுபோல பரிகாரநீதியின் அடிப்படையில் அரசியல் தீர்வினை நாமும் எதிர்பார்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்தம் இதுவாக இருக்க இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை பின்தள்ளிவிட்டு 13ம் திருத்தச்சட்டத்தினை அரசியல் பரப்பில் தூக்கிப்பிடிக்கப்படுவதானது யாருக்கு அபாயம் ? யாருக்கு அதிஸ்டம் ?
உண்மையில் “கொழும்புக்கே” நன்மை அதிகம்.
குறிப்பாக இலங்கை-இந்திய ஒப்பந்த்தின் 1.4 சரத்தில் சொல்லப்பட்டுள்ள இலங்கைதீவின் வடக்கு கிழக்கு பகுதிய தமிழர்களின் தாயகம் என்ற அங்கீகாரம், நாளும் பொழுதும் நடந்தேறும் நில அபகரிப்புக்கள், சிங்கள குடியேற்றங்களால் அழிக்கப்பட்டு வருகின்றது.
இதனை இன்னும் வேகப்படுத்தும் வகையிலேயே 13ம் திருத்தச்சட்டம் அமைந்துவிடும் ஆபத்துக்கு இதில் உள்ளது. தமிழர்களின் காணிகளை “கொழும்பு” லாவமாக உள்வாங்கிக் கொள்வதற்கே “13” வழிவகுக்கின்றது.
அரச நிலங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கைகளில்தான் உள்ளதன்றி மாகாணசபைக்கு கிடையாது என்பதே 13ம் திருத்தசட்டத்தின் உள்ளடக்கமாக இருக்கின்றது.
மாகாணசபையுடன் ஆலோசித்து விட்டு மத்திய அரசாங்கம் காணிகளை “தேசியக் கொள்கை” எடுத்துக் கொள்ளலாம்.
காணிகளை மட்டுமல்ல மாகாணசபையின் எந்தவொரு விடயத்தினையும் “கொழும்பு” எடுப்பதற்கு மாகாணசபையின் அனுமதி தேவையில்லை. மாகாணசபையுடன் நடப்பது கலந்தாலோசனை மட்டுமே.
இந்தியாவின் அனுசரனையுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாச்சார மையத்தினை, திறப்பதில் பல மாதங்களாக காணப்படும் இழுபறி என்பது அதனை “கொழும்பு” தனக்குள் பறித்தெடுக்கும் இழுபறியினாலேயே ஏற்பட்டுள்ளது என யாழ் மாநகர முதல்வரின் சமீபத்திய கூற்று இதற்கு சான்றாக உள்ளது.
நிலைமை இதுவாக இருக்க 13ஐ நடைமுறைப்படுத்தக் கோருவது என்பது கொழும்புக்கு நன்மை தரும் என்ற நிலையில், தமிழர்களின் நலனும், இந்தியாவின் நலனும் ஒற்றைப்புள்ளியில் சந்திக்கிக்க, தமிழர்களுக்கான பரிகார நீதிக்கு இந்தியா வழிசெய்வதே உகந்ததாக உள்ளது.
தமிழ் மக்கள் தாம் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதனை அவர்களே தீர்மானிக்கின்ற வகையில், பொதுவாக்கெடுப்பொன்றினை இந்தியா நடத்துவதற்கு முன்வர வேண்டும். தமிழ்நாட்டு சட்டசபையில் முன்னராக சகல கட்சிகளாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் இதனையே வலயுறுத்துகின்றது.
அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்திய “அதிகாரபகிர்வு” உட்பட எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் சிங்கள இனவாதம் இடம் தரப்போதில்லை என்பதே வரலாற்று உண்மை மட்டுமல்ல, ஜீ.எல்.பீரிசின் இந்தக்கூற்றும் அதனை வெளிப்படுத்தி நிற்கின்றது.
அது “அதிகாரப் பகிர்வு கவனத்தில் கொள்ளப்படும. ஆனால் எதைச் செய்தாலும் நாட்டில் போதியளவுக்கு ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். பாரியளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டால், அதை களத்தில் செயற் படுத்துவது கடினமாக இருக்கும்.”