40 செயற்கை கோள்களை அழித்த மின் காந்தப் புயல்
11 Feb,2022
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சில தினங்களில், 40 செயற்கை கோள்கள், திடீரென ஏற்பட்ட மின்காந்தப் புயலால் எரிந்து சாம்பலாயின.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலன் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் விண்வெளி சுற்றுலா, இணைய சேவை உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் உலகளவில் இணைய வசதியை ஏற்படுத்த, 2,000க்கும் மேற்பட்ட, 'ஸ்டார்லிங்க்' செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
கடந்த வாரம் மட்டும் அது, 49 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கை கோள்களை பூமியில் இருந்து, 210 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்த முயன்றபோது, திடீரென பயங்கர வேகத்தில் மின்காந்தப் புயல் பூமியை தாக்கியது. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், 40 செயற்கை கோள்களை தாக்கி அழித்தது.