போதைப்பொருள் கடத்தல்: 3 இலங்கையர்கள் சென்னையில் கைது
10 Feb,2022
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 6 பேரை இந்தியாவின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சென்னை – கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தியபோது 11 கிலோகிராம் Amphetamine போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வாகன உதிரிப்பாகங்களை கொண்டு செல்லும் போர்வையில் போதைப்பொருளை கடத்துவதற்கு முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருளை கடத்துவதற்கு பண உதவி செய்பவர்கள், போதைப்பொருளை வாங்குபவர்கள், விற்பவர்கள், இடைத்தரகர்கள் என பலரை இந்தியாவின் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர்.
இந்தியா – மியன்மார் எல்லையில் இருந்து சென்னை வழியாக இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கடந்த 7 ஆண்டுகளாக இலங்கை, தமிழகம், மியன்மார் ஆகிய நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.