தவறான டயக்னோசிஸ் பலரின் வாழ்வையே புரட்டிப் போட்டுள்ளது. அதில், கான்னி பார்கே என்ற பெண்மணியும் ஒருவர். பார்வைக் குறைபாட்டுக்கு மருத்துவரை அணுகிய இவருக்கு தவறான டயக்னோசிஸ் செய்யப்பட்டதால், 15 ஆண்டுகள் பார்வையில்லாமல் இருந்துள்ளார். சமீபத்தில் அதைக் கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
க்ளூகோமா என்பது கண் பார்வையை முற்றிலுமாக இழக்கச் செய்யும் ஒரு நோயாகும், அமெரிக்காவில் உள்ள கொலொராடோ என்ற மாகாணத்தில் வசித்து வருகிறார் கான்னி. ஒரு நாள் கார் ஓட்டிச் செல்லும் பொது கார் விளக்குகளில் பிரிசம் மற்றும் ஹாலோக்கள் தெரிவதைக் கண்டறிந்தார். இந்த அறிகுறி தெரிந்த மூன்று வாரங்களிலேயே பக்கவாட்டில் எதுவும் தெரியவில்லை என்பதைக் கண்டறிந்தார்.
தனக்கு பார்வை குறைபாடு இருப்பதை அறிந்து, உரிய சிகிச்சை பெற 2003-ம் ஆண்டு கண் மருத்துவரை அணுகியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு க்ளூகோமா என்ற நோய் அல்லது அவரது ரெட்டினா தனியே பிரிந்து வரும் நிலை ஆகிய ஏதோ ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். அது மட்டுமின்றி, இந்த நிலைகளால் அவருடைய பார்வை முழுமையாக இழக்க நேரிடும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். மனம் உடைந்து போன கான்னி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, பார்வையில்லாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
“என்னை நானே காயப்படுத்திக் கொள்வதை என்னால் நம்ப முடியவில்லை. வழி தெரியாமல் தொலைந்து போனேன், படிக்கட்டுகளில் ஏறும் போதும், இறங்கும் போதும் விழுந்து அடிபட்டுக்கொண்டேன். ஒரு முறை வீட்டில் தீப்பற்றிக் கொண்டிருக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.
பார்வையை கிட்டத்தட்ட 90% இழந்த உடனே, டென்வருக்கு இடம் பெயர்ந்தார் கான்னி. அங்கே பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்ந்து, தன்னைத் தானே பார்த்துக்கொள்ள முடிவு செய்தார். பார்வை பறிபோனதைப் பற்றி கவலை இருந்தாலும், யாரையும் சார்ந்து இருக்காமல், காம்ப்பிங், விளையாட்டுகள், இசை நிகழ்சிகள், காயாக்கிங், ஐஸ் ஸ்கேட்டிங் உள்ளிட்ட பலவற்றில் ஈடுபட்டார். ஆனால், சமைப்பதற்கும், வீட்டை சுத்தம் செய்யவும் உதவி தேவைப்பட்டது என்று வருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவருக்கு இருந்த நோய் க்ளூகோமா இல்லை, கேட்டராக்ட் தான் என்பதைக் கண்டறிந்தார். 2018 ஆண்டு, UC health ஐ சென்டரில் மீண்டும் பார்வையை பரிசோதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொண்ட பொது, கான்னிக்கு க்ளூகோமா இல்லை என்பதும், அது கண் புரை எனப்படும் கேட்டராக்ட் பிரச்சனை தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சிறிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.
சிறிய அறுவை சிகிச்சை மூலம், இப்போது அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை திரும்பியுள்ளது. இத்தனை ஆண்டுகளுக்கும் மேலாக கணவர், குழந்தைகள் என்று யாரையுமே பார்க்க முடியாமல் இருந்த இந்த பெண்மணிக்கு, மீண்டும் பார்வை திரும்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி, பிறந்து மூன்று வாரங்களே ஆன அவருடைய பேரக்குழந்தையைப் முதல் முதலாகப் பார்த்தது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது என்றும் கூறினார்.
பார்வை திரும்பியது மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கு வயதாகிப் போனதை நம்பவே முடியவில்லை என்று தெரிவித்தார்.