தென்னாபிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!
13 Jan,2022
தென்னாபிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டுள்ளது.
ஒமிக்ரோன் வகை கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தென்னாபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளிலிருந்து விமானங்கள் வந்து செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த அவசரக்கால தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இதையடுத்து, அந்த நாடுகளிலிருந்து விமானங்கள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து விமானங்கள் செல்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகை கொரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கொரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதனால் அச்சமடைந்த பல்வேறு நாடுகள், தென்னாபிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருந்து பயணிகள் செல்வதற்கும் அடுத்தடுத்து தடை விதித்தன.