சாதாரண சளிக்கு எதிராகச் செயல்படும் இயற்கையான தடுப்பு அரண் போன்ற அமைப்பு, கொரோனா வைரஸுக்கு எதிராகவும் கொஞ்சம் பாதுகாப்பு வழங்குவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்த தனிநர்கள் 52 பேர் இந்த சிறிய ஆய்வில் பங்கெடுத்தனர். இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்கிற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண சளியால் பாதிக்கப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் பாதிக்கப்படாமல் தவிர்க்க, குறிப்பிட்ட நோயெதிர்ப்பு செல்களின் நினைவு வங்கி மேம்பட்டுள்ள நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறைவாக உள்ளது.
யாரும் இந்த இயற்கையான பாதுகாப்பை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு, மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு எப்படி வைரஸை எதிர்த்துப் போராடுகிறது என்பது குறித்த விவரங்களை வழங்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஒரு வித கொரோனா வைரஸால்தான் கோவிட்-19 தொற்று ஏற்படுகிறது, சில சளி பாதிப்புகள் மற்ற கொரோனா வைரஸ்களால் ஏற்படுகிறது. எனவே ஒன்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் மற்றொரு கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுமா என விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
எனவே, சமீபத்தில் சளியால் பாதிக்கப்பட்டவர்கள், கோவிட் 19 தொற்றிலிருந்து தன்னிச்சையாக பாதுகாக்கப்படுவார்கள் என்று கருதுவது மிகப்பெரிய தவறு என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எல்லா வித சளி பிரச்னைகளும் கொரோனா வைரஸ்களால் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் சிலர் வைரஸை எதிர்கொண்ட பின் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள், சிலர் பாதிக்கப்படுவது இல்லை என்பதை இம்பீரியல் காலேஜ் லண்டன் அணி இன்னும் புரிந்து கொள்ள விரும்பியது.
அவர்கள், மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கமான டீ செல்களின் மீது தங்கள் கவனத்தைச் செலுத்தினர். சில டீ செல்கள், ஒரு குறிப்பிட்ட அபாயங்களால் பாதிக்கப்பட்டுள்ள செல்களைக் கொல்லும். உதாரணமாக சளி வைரஸைக் குறிப்பிடலாம்.
உடலிலிருந்து சளி போன பிறகும் கூட, உடலில் இருக்கும் சில டீ செல்கள் நினைவு வங்கி போல செயல்படும். மீண்டும் எப்போது வைரஸை எதிர்கொள்கிறதோ, அப்போது களமிறங்கி அவை வைரஸை எதிர்த்துச் செயல்படும்.
கடந்த செப்டம்பர் 2020-ல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்த, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் வாழ்ந்த 52 பேரை ஆராய்ந்தது இந்த ஆய்வுக்குழு. அதில் பாதி பேர் அடுத்த 28 நாள் ஆராய்ச்சியில் கொரோனா வைரஸால் (கோவிட்) பாதிக்கப்பட்டனர், ஆனால் மீதி பாதி பேர் கொரோனாவால் (கோவிட்) பாதிக்கப்படவில்லை.
ஒமிக்ரான்
கொரோனாவால் பாதிக்கப்படாத நபர்களில், மூன்றில் ஒருவரின் ரத்தத்தில், குறிப்பிட்ட நினைவு வங்கிகளைப் போல் செயல்படும் டீ செல்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்துள்ளது.
மனித உடலில், மனிதர்களோடு தொடர்புடைய மற்றொரு கொரோனா வைரஸ் (பொதுவான சளி) தொற்று அடிக்கடி ஏற்படும் போது, இது போன்ற டீ செல்கள் உருவாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் கொரோனாவால் (கோவிட்) பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, காற்றோட்டம், அவர்களோடு இருப்பவர்கள் எவ்வளவு கடுமையாக கோவிட்டால் பாதிக்கப்பட்டார்கள் போன்றவையும் இதில் முக்கிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
இது ஒரு சிறிய ஆராய்ச்சி என்றாலும், மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் எப்படி வைரஸை எதிர்த்துப் போராடுகிறது, அது எப்படி எதிர்கால தடுப்பூசிகளுக்கு உதவும் என்பதைப் புரிந்துகொள்ள உதவியது என ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சைமன் கிளார்க் கூறினார்.
மேலும் "இந்த தரவுகளை மேலதிகமாக விளக்கக் கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தீவிரமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸால் சளியே ஏற்படவில்லை என்பது சாத்தியமில்லை.
"சமீபத்தில் சளியால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கருதுவது மிகப் பெரிய தவறு. சளி பிடிக்க 10 - 15 சதவீதம் மட்டுமே கொரோனா வைரஸ்கள் காரணம்" என்று கூறினார்.
கோவிட் 19க்கு எதிரான பாதுகாப்புக்கு, கொரோனா தடுப்பூசிகள் அவசியம் என, இந்த ஆய்வின் மூத்த ஆசிரியர் அஜீத் லால்வானி ஒப்புக் கொண்டார்.
மேலும் "உடல் என்ன செய்கிறது என்பதைக் கற்றுக் கொள்வது, புதிய தடுப்பூசியின் வடிவமைப்புக்கு உதவும்" என்றும் கூறினார்.
தற்போதுள்ள தடுப்பூசிகள் பிரத்யேகமாக, ஸ்பைக் புரோட்டின் என்கிற புரத இழைகளையே இலக்கு வைக்கின்றன, அவ்விழைகள் புதிய திரிபுகளில் மாறலாம்.
ஆனால் உடலின் டீ செல்களோ வைரஸின் உள்ளார்ந்த புரதங்களை இலக்கு வைக்கின்றன, அது பெரிய அளவில் திரிபுக்கு திரிபு மாறுபடுவதில்லை.
தடுப்பூசிகள் டீ செல்களின் வேலையைச் செய்தால், நீண்ட காலத்துக்கு கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறினார் அஜீத் லால்வானி.