130 ஆண்டுகள் பழமையான கேப்சூல்.. சிலையின் பீடத்திற்கு கீழே கண்டுபிடிப்பு
29 Dec,2021
1887ம் ஆண்டு செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டிருந்த 130 ஆண்டுகள் பழமைவாய்ந்த டைம் கேப்சூலானது, கான்ஃபெடரேட் ஜெனரலின் சிலையின் பீடத்திற்கு கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விர்ஜினியா ஆளுநர் ராஃல்ப் நார்தம் அறிவித்துள்ளார்.
1861 முதல் 1865ம் ஆண்டு வரை அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. தென் மாநிலங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கும், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற இப்போரில் அமெரிக்காவின் 3% மக்கள் தொகை அதாவது சுமார் 10 லட்சம் பேர் இறந்தனர்.
அடிமை முறையை ஒழிப்பது குறித்த விவகாரத்தில் தொடங்கிய சிவில் போரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் ராணுவ ஜெனராக இருந்தவர் தான் ராபர்ட் ஈ. லீ. அமெரிக்க ராணுவத்தில் 32 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் சிவில் போரின் போது தன்னுடைய சொந்த மாகாணமான விர்ஜினியாவின் பக்கம் சாய்ந்து ஐக்கிய அமெரிக்காவை எதிர்த்து போரிட்டார்.
தெற்கு பகுதியில் சிவில் போரின் கதாநாயகனாக வர்ணிக்கப்படும் இவருக்கு பல்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான ராபர்ட் ஈ. லீயின் சிலையை அகற்றுவது என விர்ஜினியா ஆளுநர் முடிவெடுத்து அதன்படி விர்ஜினியா மாகாணத்தின் ரிச்மண்டில் உள்ள லீயின் சிலையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிலையின் அடிப்பாகத்தை பெயர்தெடுத்த போது சில நாட்களுக்கு முன்னர் அங்கு புதைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அதில் 1875ம் ஆண்டின் குறிப்புகளுடன் கூடிய நாட்காட்டி, ஈரத்தில் நனைந்த புத்தகம், புகைப்படம், துணி உறை மற்றும் வெள்ளி நாணயம் இருந்தது. சிலையை நிறுவிய சில தொழிலாளர்கள் சந்ததியினருக்காக விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்களாக இந்த பொருட்கள் தோன்றின.
இந்நிலையில் நேற்று அதே இடத்தில் ஷூ பாக்ஸ் அளவுள்ள காப்பரிலான பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது 130 ஆண்டுகள் பழமைவாய்ந்த டைம் கேப்சூலாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ராபர்ட் ஈ. லீ சிலையின் பீடத்துக்கு கீழ் டைம் கேப்சூல் புதைக்கப்பட்டுள்ளதாக 1887ம் ஆண்டு வெளிவந்த செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து விர்ஜினியா மாகாண ஆளுநர் ரால்ஃப் நார்தாம் படங்களுடன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இது அனைவரும் எதிர்பார்க்கும் டைம் கேப்சூலாக இருக்கலாம். இது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். இந்த பெட்டி இன்று (டிசம்பர் 27) திறந்து பார்க்கப்படாது. அடுத்த கட்ட நகர்வுகளுக்கு இணைப்பில் இருங்கள்” என கூறியிருக்கிறார்.