கடைசி உணவை ஆர்டர் செய்தவரின் உயிரை காப்பாற்றிய டெலிவரி நபர் - நெட்டிசன்கள் பாராட்டு!
22 Dec,2021
உணவு ஆர்டர் செய்த நபரின் உயிரை தக்க சமயத்தில் தகவல் தந்து காப்பாற்றிய விவேகம் மற்றும் புத்திசாலித்தனத்திற்காக ஃபுட் டெலிவரி செய்யும் நபருக்கு போலீசார் நன்றி தெரிவித்து கொண்டனர்.
சீனாவில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற வாடிக்கையாளரின் உயிரை காப்பாற்றியதற்காக ஃபுட் டெலிவரி நபர் ஒருவர் சோஷியல் மீடியாக்களில் பாராட்டை பெற்று வருகிறார். சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. துரிதமாக செயல்பட்டு வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றியதற்காக குறிப்பிட்ட நபருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இப்போது இந்த சம்பவம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு வாடிக்கையாளர் தனது உணவை ஆர்டர் செய்யும் போது கூடவே ஒரு அச்சுறுத்தும் குறிப்பையும் சேர்த்துள்ளார். தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து விட்டு "என் வாழ்க்கையில் கடைசி உணவு" (The last meal in my life.) என்ற குறிப்பையும் சேர்த்து உள்ளார். இந்த Note-ஐ பார்த்து விட்டு சற்று குழப்பத்துடனே தான் உணவு டெலிவரி செய்யும் நபர் வாடிக்கையாளரின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டு காலிங் பெல்லை பலமுறை அழுத்தி உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த ஃபுட் டெலிவரி நபர் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக காவல்துறைக்கு கால் செய்து விஷயத்தை கூறி, ஒருவேளை வாடிக்கையாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கலாம்.
உடனடியாக வாருங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தகவல் கிடைத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் வந்து கதவை தட்டி வரை வெளியே வர சொல்லி கேட்ட போது, அந்த நபர் கதவை திறக்க மறுத்து, ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்.
இதனை தொடர்ந்து காவலர்கள் உணவு ஆர்டர் கொடுத்த வாடிக்கையாளரிடம் பேச்சு கொடுத்து கொண்டே அவரை கொஞ்சம் கொஞ்சமாக அமைதிப்படுத்தினார்கள். அதே நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் அவரை காப்பாற்ற அவரது அறைக்குள் நுழைந்து அவரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். எனினும் போலீசார் வருவதற்கு முன்பே அந்த நபர் சுமார் 60-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை எடுத்து கொண்டதால் சுயநினைவை இழக்க தொடங்கினார்.
இதனை தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் அவரை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே உணவு ஆர்டர் செய்த நபரின் உயிரை தக்க சமயத்தில் தகவல் தந்து காப்பாற்றிய விவேகம் மற்றும் புத்திசாலித்தனத்திற்காக ஃபுட் டெலிவரி செய்யும் நபருக்கு போலீசார் நன்றி தெரிவித்து கொண்டனர். இதனை தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாடிக்கையாளரின் உயிரை காப்பாற்றிய ஃபுட் டெலிவரி நபர் சீனாவில் ஹீரோவாக போற்றப்படுகிறார்.