ஜப்பான் நாட்டை சேர்ந்த விண்வெளி சுற்றுலாப் பயணி ஒருவர் ஆன்லைன் உணவு டெலிவரியை விண்வெளியில் செய்துள்ளார்.டப்பாவில் அடைக்கப்பட்ட உணவை விண்வெளி வீரர்களுக்கு கொடுத்து அசத்தியுள்ளார்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த யுசாகு மேசாவா இந்த அறிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இம்மாதம் 11ம் தேதியன்று காலை 9.40 மணிக்கு, வானில் 248 மைல் தூரத்தை 8 மணி நேரம் 34 நிமிடங்களில் கடந்து இது சாத்தியமாகி உள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான உபெர் ஈட்ஸ் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
விண்கலத்தில் இருக்கும் ஒரு கதவை திறந்து அந்த பெரும் கோடீஸ்வரர் உணவை கொடுக்கின்றார்.
உணவு பொட்டலம் மிதந்தபடி அவர் முன்னே செல்கிறது. அந்த பொட்டலத்தை விண்வெளி வீரர்கள் பயணிக்கும் விண்கலத்திற்குள் கொடுக்கிறார்.
விண்வெளி வீரர் அந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டு விரல் சைகை மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
விண்வெளிவீரர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவை விட இந்த உணவு அவர்களுக்கு நிச்சயம் புத்துணர்ச்சியை அளித்திருக்கும் என்று உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜப்பானிய உணவு வகைகள் சில யாதெனில், மிசோவில் வேகவைத்த கானாங்கெளுத்தி மீன், இனிப்பு சாஸில் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி உள்பட இன்னும் சில உணவு வகைகள் ஆகும்.
இந்த உணவுகளை தனது சொந்த செலவில் விண்வெளி வீரக்ளுக்கு விருந்தாக கொடுத்துள்ளார் கோடீஸ்வர மனிதரான யுசாகு மேசாவா.
உபெர் ஈட்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பதிவில், “நாங்கள் இந்த உலகிலேயே இல்லை. எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்” என்று பதிவிட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உணவு பொட்டலத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
46 வயதான மேசாவா மற்றும் அவருடைய நண்பர் யோசோ ஹிரானோ(36) ஆகியோர் 2009ம் ஆண்டுக்கு பின் முதன்முதலாக சொந்த செலவில் விண்வெளி மையத்துக்கு சென்ற மனிதர்கள் என்ற சாதனையை படைத்து உள்ளனர்.
அவர்கள் இருவரும் ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில் ரஷிய நாட்டு விண்வெளி வீரர் அலெக்சாண்டர் மிசுர்க்கின் உடன் பயணித்துள்ளனர்.
இந்த பயணத்துக்கு 66 பேர் கொண்ட குழுவினர் உதவி புரிந்துள்ளனர்.
முன்னதாக 2001-2009 காலகட்டத்தில் 7 சுற்றுலா பயணிகள், விண்வெளி மையத்துக்கு பயணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை விண்வெளி மையத்துக்கு அழைத்து சென்ற அதே நிறுவனம் தான் தற்போது இவர்களையும் வெற்றிகரமாக அழைத்து சென்றுள்ளது.
விர்ஜினியா நாட்டை சேர்ந்த ஸ்பேஸ் அட்வெண்சர்ஸ் நிறுவனம் இந்த சாத்தியமற்ற நிகழ்வினை சாத்தியமாக்கி காட்டியுள்ளது.