அ மெரிக்கா முன் நின்று ஏற்பாடு செய்த ‘ஜனநாயக மாநாடு’ வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த இரண்டு நாள் (டிச 9-10) மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, "ஜனநாயகம் – ஒரு விபத்தினால் நிகழ்வது அல்ல; ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்; அதற்காகப் போராட வேண்டும்; அதனை வலிமையாக்க வேண்டும்; அதனை (தொடர்ந்து) புதுப்பித்தாக வேண்டும்” என பேசினார். மாலத்தீவு அதிபர் இப்ரஹிம் மொகமது சோலி முதல் (‘எமது நாட்டில் ஜனநாயகம் இப்போதைக்கு தொட்டில் குழந்தையாக இருக்கிறது; வளர்த்து எடுக்கிற முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம்’) நியுசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் வரை (‘அனைத்து முனைகளிலும், உலகின் ஆகச் சிறந்த ஜனநாயகமாக தொடர்ந்து முன்னேறி வருகிறோம்’) பல உலகத் தலைவர்கள் காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டுக்கான அவசியம் என்ன..?
‘ஃப்ரீடம் ஹவுஸ்’ அமைப்பு வெளியிட்ட ‘உலகில் சுதந்திரம் 2021’ அறிக்கையின்படி, 2005-ல் இருந்து 2020 வரையிலான 15 ஆண்டுகளில், சுதந்திரமற்ற நாடுகளின் எண்ணிக்கை, 45-ல் இருந்து 54 ஆக உயர்ந்து இருக்கிறது. ‘ஓரளவு சுதந்திரம்’ உள்ள நாடுகள் 58-ல் இருந்து 59 ஆகி இருக்கிறது. அதாவது கடந்த 15 ஆண்டுகளில், 10 நாடுகளில் மக்களின் சுதந்திரம் பறி போயிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான், சார்பு நிலையற்ற நீதியம், நடுநிலையான துணிச்சல் மிக்க ஊடகங்கள் உள்ளிட்ட வலுவான ஜனநாயக அமைப்புகள், சம உரிமை நல்கும் சட்ட நடைமுறைகள், குடிமக்களின் குரலைப் பிரதிபலிக்கும் சமூகக் கூட்டமைப்புகள், ஊழலற்ற வெளிப்படையான அரசு நிர்வாகம் ஆகியன சேர்ந்த ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு ஆதரவாய் நல்ல ஆலோசனைகள், திட்டங்கள், வழிமுறைகளைப் பன்னாட்டுத் தலைவர் கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
எதிர்பார்த்தாற் போலவே, இந்த மாநாட்டை சீனா கடுமையாக எதிர்க்கிறது. ‘தாராளமான ஜனநாயக அமைப்புமுறை’ மக்களுக்கு நன்மை பயக்காது என்பது சீனாவின் வாதம்.
கடுமையான எதிர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பாக சீன அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நடைமுறை கொண்ட நாடு’ என்று தன்னைத் தானே கொண்டாடிக் கொண்டது. இதுதான் மிகப் பெரிய நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனாவின் அசாத்திய சாதனைகளை யாரும் மறுக்கவே இல்லை. கடந்த சில பத்தாண்டுகளில் சிறந்த திட்டமிடல், கடுமையான உழைப்பு மற்றும் திறமையான நிர்வாகம் மூலம் மிக வலுவான நாடாக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது.
இதிலும் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் தன்னை ஒரு ஜனநாயக நாடாகவும் மனித உரிமைகளின் பாதுகாவலன் ஆகவும் சீனா கூறிக் கொள்வதைத் தான் சர்வதேச சமூகம் ஏளனமாகப் பார்க்கிறது.
தனது நாட்டில், 2016, 2017-ம் ஆண்டுகளில் 90 கோடிக்கு மேற்பட்டோர் பங்கு பெற்ற ‘தேர்தல்’ நடந்ததாக சீன அரசு கூறுகிறது. ஆனால், உயர்மட்ட, அடிமட்ட ‘காங்கிரஸ்’, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அமைப்புகளாக மட்டுமே செயல்பட முடியும் என்பதையும், ‘அதிபர்’, பிரதமர்’ பதவிகளுக்கு ஒரு நபர் மட்டுமே போட்டியிடுகிற விந்தை பற்றியும் வெள்ளை அறிக்கையில் எதுவும் குறிப்பிடாதது ஏன்? என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன.
1989 ஜூன் 4 (மே 35) தியானன்மென் சதுக்கப் போராட்டத்தில், ஜனநாயக உரிமைகள் கோரி போராடிய தனது நாட்டுக் குடிமகன்கள் மீது சீன அரசு நடத்திய கொடூரத் தாக்குதல் தொடங்கி, தற்போது சில நாட்களாக ஹாங்காங் நகரில் நிகழ்ந்து வரும் ஜனநாயக விரோத சம்பவங்கள் வரை எதுவுமே சர்வதேச அரங்கில் சீனாவுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
கரோனா நோய்த் தொற்று குறித்து முதலில் அறிவித்த ஆய்வக விஞ்ஞானி முதல் மிகப் பெரும் வணிக நிறுவன உரிமையாளர், உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீராங்கனை வரை, சீன அரசுக்கு எதிராகப் பேசுகிற பலர் அவ்வப்போது காணாமல் போகிற சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.
இத்துடன், தான் வழங்கிய நிதியுதவியின் மீது அநியாய வட்டி விதிப்பது, ஏற்றுக்கொள்ள இயலாத நிபந்தனைகளுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட மிரட்டல் நடவடிக்கைகள் குறித்து சீனாவின் நட்பு நாடுகளுமே கூடப் புகார் தெரிவித்து வருகின்றன. ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள், சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு குறித்த தனது எதிர்ப்பு, மனத்தாங்கலைப் பல்வேறு போராட்டங்களின் மூலம் வெளிப்படையாகவே பல முறை பதிவு செய்துள்ளனர்.
திபெத், தைவான், ஹாங்காங், தென் சீனக் கடல். இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளின் மீது சீனாவின் அணுகுமுறை தொடர்ந்து சர்வதேச அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகவே அமைந்து உள்ளன.
உலகின் பல நாடுகளில், பல பகுதிகளில் தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் அச்சத்துடன் வாழ்கிற, விடுதலை உணர்வு கொண்ட சீனப் பிரமுகர்கள் எத்தனை பேர்..? இந்தப் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.
இத்தகைய சூழலில் தனது போக்கைச் சற்றும் மாற்றிக் கொள்ள முன்வராத சீன அரசு, உலக ஜனநாயக மாநாட்டைக் கடுமையாக எதிர்க்கிறது. முழு இறையாண்மை கொண்ட நாடாக சீனாவுக்கு மிக நிச்சயமாக இதற்கான உரிமை இருக்கிறது. ஆனால், இந்தியா உள்ளிட்ட பிற ஜனநாயகக் குடியரசு நாடுகளின் செயல்பாடுகளைக் குறைகூறவோ, அது குறித்து கிண்டல் செய்யவோ எந்தத் தார்மீக உரிமையும் இல்லை.
மற்றபடி, தானே உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற சீன அரசின் வெள்ளை அறிக்கை அறிவிப்பு, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அவல நகைச்சுவை அன்றி வேறில்லை. ஒப்புக் கொள்வோம் - இதற்கும் கூட சீனாவுக்கு ‘ஜனநாயக உரிமை’ இருக்கிறது.