ஹெலிகாப்டர் விபத்து குறித்து சந்தேகம் எழுப்பும் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்
10 Dec,2021
ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் பலியாக காரணமாக இருந்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து, சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, உயர் ராணுவ அதிகாரிகள் சூலூர் விமான படைத்தளம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டனர். 14 பேருடன் பயணித்த இந்த ஹெலிகாப்டர் குன்னூர் வரும் வழியில், நீலகிரியின் காட்டேரி மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு விமானி மட்டும் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த விபத்து குறித்து மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடையே பேசினார்.
அப்போது, “சமீப காலங்களில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதில் பிபின் ராவத் முக்கிய பங்காற்றியிருக்கிறார். எனவே இப்படி ஒரு விபத்து நடந்திருப்பது, மக்களிடையே பல்வேறு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. மேலும் ஜெனரல் பிபின் பயணித்த ஹெலிகாப்டர் மிகவும் நவீன ரகமானது, அதில் இரட்டை இஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்ததை கருத்தில் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்தியுள்ளதாக பிரகடனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து எப்படி சாத்தியம்? இந்த விபத்தால் முழு நாடும், தலைமையும் குழப்பமடைந்திருக்கலாம், பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பிரதமரோ அனைத்து சந்தேகங்களையும் நீக்க வேண்டும்” இவ்வாறு சஞ்சய் ராவத் பேசினார்.
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான விமான படை தாக்குதல்களை நடத்தியதில் முக்கிய பங்கு பிபின் ராவத்துக்கு இருந்ததாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.