5 வயது சிறுமியை பட்டினி போட்டு கொலை செய்த கொடூர தம்பதி! – ஜெர்மனி கடும் தண்டனை!
02 Dec,2021
அடிமையாக வாங்கிய சிறுமிக்கு உணவு கூட கொடுக்காமல் பட்டினி கொலை செய்த தம்பதியருக்கு ஜெர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
சிரியாவில் குர்தீஸ் மொழி பேசும் சிறுபான்மை இனமாக யாஸிடி மக்கள் இருந்து வருகிறார்கள். சிரியாவில் உள்நாட்டு போரால் யாஸிடி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது இனவெறி படுகொலைகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்தி வருவதாகவும் புகார்கள் உள்ளது.
இந்நிலையில் சிரியாவை சேர்ந்த தாஹா அல் ஜுமாலி என்பவரும் அவரது மனைவியும் 5 வயதான யாஸிடி சிறுமியை அடிமையாக வாங்கியுள்ளனர். ஐ.எஸ் ஆதரவாளரான அல் ஜுமாலி சிறுமிக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் சங்கிலியில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி பட்டினியால் சங்கிலியில் கட்டப்பட்ட நிலையிலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் க்ரீஸ் நாட்டில் இருந்த அல் ஜுமாலி தம்பதியினர் கைது செய்யப்பட்டு ஜெர்மனி கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அங்கு உலகளாவிய நீதி என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த படுகொலை விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம் அல் ஜுமாலிக்கு ஆயுள் தண்டனையும், அவர் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது. பட்டினியால் இறந்த சிறுமிக்கு நீதி கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.