மாணவிகளை மறைந்திருந்து படம் பிடித்த இளைஞர்
02 Dec,2021
பல்லடத்தில் சாலையில் செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை அங்குள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் போட்டோ மற்றும் வீடியோ எடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தின் மையப்பகுதியாக அமைந்துள்ளது என்.ஜீ.ஆர் சாலை. பல்லடத்தின் பிரதான சாலையான இதைத் தான் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் பயன்படுத்துகின்றனர். இந்த என்.ஜீ.ஆர் சாலையில் உள்ள அரிசிக் கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் அகமது மொய்தீன்.
இன்று காலை அரிசிக் கடையில் நின்று கொண்டிருந்த அகமது மொய்தீன் அந்த வழியாகச் சென்ற சில கல்லூரி மாணவிகளைத் தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த கல்லூரி மாணவிகள் தங்களுடன் வந்த கல்லூரி நண்பர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அகமது மொய்தீனிடம் இருந்த செல்போனை கல்லூரி மாணவர்கள் பறித்து சோதனை செய்துள்ளனர். அதில் அவ்வழியாகச் செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி அரிசிக் கடைக்கு வந்த பெண்களையும் அவர் மறைந்திருந்து போட்டோ
மற்றும் வீடியோ எடுத்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் அகமது மொய்தீனை பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அகமது மொய்தீன் கடந்த சில மாதங்களாகவே அவ்வழியாகச் சென்ற பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளைப் புகைப்படம் எடுத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பல்லடத்தின் மையப்பகுதியான என்.ஜீ.ஆர் சாலையில் பெண்களைப் புகைப்படம் எடுத்த சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.