சனத்குமாரர் என்ற மகாயோகியை நாரதர் அணுகி, `ஐயனே! எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
`நல்லது நாரதா! உபதேசம் செய்வதற்கு முன்னால் ஒரு வார்த்தை. உனக்கு ஏற்கெனவே என்னென்ன தெரியும் என்பதை முன்கூட்டிச் சொல்லிவிடு. அதன் பிறகுதான் எதை உபதேசிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்!’ என்றார் சனத்குமாரர்.
நாரதர் தான் கற்ற வித்தைகளைக் கூறத் தொடங்கினார்.
`குருதேவா! எனக்கு ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தெரியும். இதிகாச புராணங்கள் தெரியும். வேதங்களின் வேதமாகிய இலக்கணம், பிதுரு, கல்பம், கணித சாஸ்திரம், சகுன சாஸ்திரம், கால நிர்ணயம், தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், நிருத்தம், பூதவித்தை, போர்முறை, வான சாஸ்திரம், சர்ப்ப வித்தை, கந்தர்வ வித்தை, இவை அனைத்துமே தெரியும்’ என்றார் நாரதர்.
அப்படிச் சொன்ன நாரதர் தன் சந்தேகம் ஒன்றையும் தெளிவுபடுத்தினார்.
`தேவா! இவ்வளவு வேத மந்திரங்களை நான் கற்றுக் கொண்டேனே தவிர, துன்பங்களைக் கடந்து செல்லும் ஆத்ம யோகத்தை அறிந்தவனாக இல்லை. `எவனொருவன் ஆத்மாவை அறிந்து கொள்கிறானோ அவனே துன்பத்தைக் கடப்பான்’ என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தயை கூர்ந்து எனக்கு நீங்கள் துன்பத்தைக் கடக்கும் மார்க்கத்தைக் கற்றுத் தர வேண்டும்’ என்றார், நாரதர்.
சனத்குமாரர் சிரித்தார்.
`நாரதரே! நீர் கற்றுக் கொண்ட வித்தைகள் எல்லாம் பெயரளவில் வித்தைகளே. அவற்றை விடப் பெரிய விஷயங்கள் சில உண்டு. அவற்றின் மூலமே ஆத்மாவை அறிய முடியும்’ என்றார் அவர்.
`எவையெவை பெரியவை?’ என்று கேட்டார் நாரதர்.
`நீ சொன்ன பெயர்களை எல்லாம் விட வாக்குப் பெரியது. அந்த வாக்கைவிட மனது பெரியது. எப்படி ஒரு கைப்பிடிக்குள் இரண்டு நெல்லிக்காயோ, இலந்தைப் பழமோ அடங்கி விடுகிறதோ, அப்படியே பெயரும், வாக்கும் மனதுக்குள் அடங்கி விடும். மனத்தால் நினைத்த பின்தானே நீ சொல்லுகிறாய். செயலில் இறங்குகிறாய். அந்த மனதுதான் ஆத்மா. அந்த மனதுதான் உலகம். அந்த மனது தான் பிரம்மம். ஆகையால் மனதை நேசிப்பாயாக. அதே நேரத்தில் இன்னொன்று: சங்கற்பம் செய்வது மனதைவிடப் பெரியது. எப்போது ஒருவன் சங்கற்பம் செய்யத் தொடங்குகிறானோ, அப்போது யோசிக்கத் தொடங்குகிறான். அது மனது. உடனே பேச ஆரம்பிக்கிறான்; அது வாக்கு. அந்த வாக்கு பெயர் வடிவமாகிறது. அதில் மந்திரங்கள் ஒடுங்கி விடுகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்கி விடுகின்றன. அதே நேரத்தில் சங்கற்பத்தைக் காட்டிலும் தியானம் பெரியது. பூமி தியானம் செய்கிறது. வானம் தியானம் செய்கிறது. மலைகள் தியானம் செய்கின்றன. ஆகையால் பெருமைக்குரிய மனிதர்கள் தியான பலத்தில் ஒரு அம்சத்தையாவது பெற்றிருக்கிறார்கள். அற்பர்களுக்கும் கலகக்காரர்களுக்கும் அது வாய்ப்பதில்லை.’
`தியானத்தை விடவும் பெரியது எது என்று கேட்கிறாயா? விஞ்ஞானம் பெரியது. ஆத்ம பலம் விஞ்ஞானத்தைக் காட்டிலும் பெரியது. விஞ்ஞானம் என்பது அனுபவ விஞ்ஞானம். ஆத்ம பலம் படைத்த யோகி நூறு விஞ்ஞானவான்களை ஆட்டி வைக்க முடியும். ஒருவன் பலமுள்ளவனாக இருந்தால் அவன் படுக்கையில் கிடக்க மாட்டான்; எழுவான்; நடப்பான்; சேவை செய்வான்.’
நாரதருக்கும் சனத்குமாரருக்கும் நடந்த இந்த விவாதத்தில் ஆத்ம பலமே பொதுவாகப் பேசப்படுகிறது.
ஆத்ம பலம் என்பது என்ன?
தன்னை உணர்தல்.
`நானே பிரம்மம்! நானே ஈஸ்வரன்’ என்ற நிலையை எய்துதல்.
கடமைகளை ஒழுங்காகச் செய்வதன் மூலம் ஆத்மா பலம் பெறுகிறது.
ஒரு கதை உண்டு.
ஒரு நதியில் வெள்ளம் வந்து, பாலத்தின் இரண்டு பக்கங்களையும் அடித்துக் கொண்டு போய் விட்டது. பாலத்தின் நடுவே ஒரு குடும்பம் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஒரு பணக்காரர், ஒரு ஓடக்காரனைக் கூப்பிட்டு அவர்களைக் காப்பாற்றும்படியும் நூறு ரூபாய் தருவதாகவும் சொன்னார்.
ஓடக்காரன் அவர்களைக் காப்பாற்றினான்.
நூறு ரூபாய் எடுத்து அவர் கொடுத்தார்.
அவன் `இது என் கடமை’ என்று கூறிப் பணத்தை வாங்காமல் மறுத்து விட்டான்.
இந்த பலன் கருதாத கருமமே `கடமை’ என்பது.
இதைக் கருமம் என்பதைவிடத் `தர்மம்’ என்பது பொருந்தும்.
இத்தகைய தர்மம் தலைமாட்டில் நின்று காப்பாற்றும்.
`நான் லண்டனுக்குப் போனேன்; நான் பாரிஸுக்குப் போனேன். அனுபவித்தேன்’ என்ற அகங்காரம் கடைசிக் காலத்தில் எந்த உதவியையும் செய்யாது.
முதலில் இந்த `நான்’ தன்மையை வென்றவர்கள் தான் பெரிய யோகிகளாக மாறுகிறார்கள்.
அந்த யோகிகளிடம் இறைவனே வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், `பொன்னைக் கொடு, பொருளைக் கொடு’ என்று கேட்க மாட்டார்கள்; `என்னையே எனக்குக் கொடு’ என்றுதான் கேட்பார்கள்.
இப்படி தன்னை உணர்ந்து கொண்டுவிட்ட மனிதன் மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான்.
`அவன் செத்து விட்டான்’ என்று சொன்னால் `அவன் உடம்பு தான் செத்து விட்டது. ஆத்மா சாகவில்லை’ என்பது பொருள்.
`என்னையே எனக்குக் கொடு’ எனும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.
துயரங்கள் தோன்றாமல், சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது அவன் உடம்பு அழிந்து விடுகிறது.
இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள்.
இமய மலையில் குடி புகுந்தவன் மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா?
ஆன்மாவை உணர்ந்து கொண்டவன் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?
நாத்திக வாதம்
நாத்திக வாதம் ஒரு மாய மான். கற்பனை மிக்க சொற்பொழிவுகளிலேயே அது உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது யாரும் சொல்லாமல் தானாகவே செத்துவிட்டது.
நான் நாத்திகனாக இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
எவ்வளவு போலித்தனமான புரட்டு வேலைகளுக்கு நம்மை ஒப்புக் கொடுத்திருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே, எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.
கடவுள் இல்லை என்று மறுப்பவன் கால காலங்களுக்கு உயிரோடிருப்பானானால், `இல்லை’ என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன்.
அவரவரும் பெற வேண்டிய தண்டனையைப் பெற்றுப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வாதங்கள் எல்லாம் செல்லு படியாகாமல், விலையாகா மல் கிடக்கின்றன.
நாத்திகன் எழுதிய போற்றத்தக்க புத்தகம் என்று எதுவும் இல்லை.
நாத்திக வாதத்தில் ஆழமோ, அழுத்தமோ, நியாயமோ இல்லாததால், அவர்களது எழுத்துக்கள் காலத்தால் செத்து விட்டன.
தேவாரமும், திருவாசகமும் நிற்பதைப் போல, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அவை நிற்க வேண்டாம். ஆனால், அவர்கள் தலைமுறையிலேயே அவை அழிந்து போனது தான் ஆச்சரியம்.
இதில் ஆச்சரியம் என்ன ஆச்சரியம்; அதுதான் நடக்கக் கூடியது.
மேலை நாட்டில் கிறிஸ்துவத்திற்கு எதிராக நாத்திகர்கள் தோன்றினார்கள். அவர்களை எதிர்த்துக் கிறிஸ்துவம் போர் புரிந்தது.
இஸ்லாத்தை எதிர்த்து நாத்திகம் தோன்றவே முடியாதபடி அது பயங்கர ஆயுதத்தோடு நிற்கிறது.
இந்து மதத்தில் நாத்திகம் தோன்றுவது சுலபம். காரணம் அது சாத்விக மதம். இது யாரையும் எதிர்த்துப் போர் புரியாது. காலத்தால் தன் கடமைகளைச் செய்து கொண்டே போகும். அதன் விளைவுகளுக்கு இறைவனையே பொறுப்பாக்கும்.
அப்படி இந்து மதம் போர் புரியாமலேயே நாத்திகம் மடிந்து விட்டது.
காரணத்தை ஆராய்வது கடினமல்ல. அதன் வாதங்கள் போலித்தனமானவை; அவ்வளவுதான்.
பல்லாயிரம் ஆண்டு காலமாக வளர்ந்து நிற்கும் ஒரு இமயமலையைச் சில செம்மறி ஆட்டுக் குட்டிகள் சாய்த்து விட முயன்றன. அவற்றின் கொம்பொடிந்தது தான் மிச்சமே தவிர, மலை, மலையாகவே நிற்கிறது.
பழைய திராவிடர் கழகச் செயலாளர்கள் எல்லாம் திருப்பதியில் அங்கப் பிரதட்சணம் வருவதை நான் பார்க்கிறேன்.
இங்கர்சால் போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் மத குருமார்களின் தவறுகளுக்கு எதிராகப் போர் புரிந்தார்களே தவிர, இறைவனே இல்லை என்ற வாதத்தில் அவர்கள் உறுதியாக இல்லை. அவர்களுக்குள்ளாகவே சபலமும், சலனமும் இருந்தன. ஒரு துளி நீரில் இவ்வளவு பெரிய உடம்பு முளைத்தெழுவதும், ஒரு சிறு காற்றில் அது உலாவிக் கொண்டிருப்பதும், ஒரு பொறி நெருப்பில் அது அழிந்து விடுவதும் ஏதோ ஒரு சக்தியின் இயக்கம் என்பதை அவர்களும் மறுக்க இயலவில்லை.
இறைவனது இயக்கம் இல்லை என்றால் காலங்களும் பருவங்களும் ஏது?
சந்திர கதி, சூரிய கதி ஏது?
நாத்திகன் இதை நம்பாமல் இல்லை. இதை எதிர்ப்பதன் மூலம் புரட்சிக்காரன் என்று பெயர் வாங்க விரும்பினான். நம்புகிற மக்களிடம் பணம் வாங்க விரும்பினான்.
என்னுடைய நண்பர் ஒருவர், அந்தக் கட்சிகளில் மிகப் பெரிய தலைவர். ஒரு கோயிலுக்கு இரண்டு லட்ச ரூபாய்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்.
நான் அவரைக் கேட்டபோது, `ஏதோ ஒரு பொருளை மட்டுமே தான் கொடுத்ததாக’க் கூறினார். கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி ஜாதகம் எழுதி வாங்கி வருகிறார். ஆனாலும் மேடைகளில் அவர் இங்கர்சால் ஆகிறார்.
கடவுளை அதிகமாகக் கேலி செய்த இன்னொரு நண்பர். அவர் ஒரு நடிகர். சமீபத்தில் திருப்பதிக்குப் போய் வந்து, `ஏதோ ஒரு சக்தி இருக்கு! இருக்கு!’ என்கிறார்.
மேடைகளில் நடைபெறும் வார்த்தை விளையாட்டுகளில் மயங்கி நாத்திகர்களானவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். `கருப்புச் சட்டைக்காரன்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டவன்.
எல்லாம் ஒரு சில ஆண்டுகளே!
நாத்திகனாக இருக்கும் வரையில் எதைப் பற்றியும் அதிகமாகப் பாட முடியவில்லையே?
நாத்திகத்தில் என்ன இருக்கிறது பாடுவதற்கு?
ஆத்திக உள்ளம் வந்த பிற்பாடுதான் ஆயிரக்கணக்கான பாடல்கள் பிறந்தன.
கடல் போன்று பரந்து விரிந்து நிற்பது, கடவுள் தன்மை.
நீந்தத் தெரிந்தவன் அந்தக் கடலில் இறங்கி விட்டால், ஒரே உற்சாகம் தான்.
நான் இன்னும் பார்க்கிறேன். கவிஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் சிலர், மேடைகளில் பாடும்போது, `நான் பெரியார் பாசறையில் புடம் போட்டு எடுக்கப்பட்டவன்’ என்கிறார்கள். அவர்கள் கவிதைகள் நிற்கவும் இல்லை; அவை கவிதைகளாகவும் இல்லை.
பாசறையில் எப்படிப் புடம் போடுவதோ எனக்கும் புரியவில்லை.
எல்லாம் போலித்தனம்! அபத்தம்!
`கண்ணதாசன் எழுதுகிற அளவு நம்மால் எழுத முடியவில்லையே’ என்று ஆதங்கப்படுகிறார்கள்.
நான் எழுதுகிற அளவுக்கு அவர்கள் எழுத வேண்டுமானால், முதலில் தாங்கள் இந்துக்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
வேத, உபநிஷத, இதிகாச புராணங்களைப் படிக்க வேண்டும்.
வெறும் வார்த்தை விளையாட்டுகள் பலிக்க மாட்டா.
மீண்டும் சொல்கிறேன், நம்முடைய பல்லாண்டுக் கால மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்களல்லர்.
திருமணத்துக்கென்று அவர்கள் சில சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அவை ஒன்றும் பார்ப்பனச் சடங்குகளல்ல.
அவை பார்ப்பனச் சடங்குகள் ஆனால், சிலப்பதிகாரமும் பார்ப்பனக் காவியமாக வேண்டும்.
அந்தச் சடங்குகளில் இருந்து மாறுபட்டுச் சுயமரியாதைத் திருமணம் என்ற பெயரில் நாத்திகர்கள் ஒரு கோமாளிக் கூத்தை ஏற்படுத்தினார்கள்.
ஆடு, மாடுகள் குட்டிச் சுவர் களுக்கிடையே கூடிக்கொள்கிற மாதிரி, அது ஒரு திருமண முறை.
தலைவர் முன்னிலையில் மாலை மாற்றுவதாம்! தாலியும் கிடையாதாம்!
மாலையைக் கழற்றிய உடனே மணப் பந்தமும் அகன்று விடுமே?
நாத்திகன், சடங்குகளை மட்டுமல்ல; மாதரார் கற்பையும் மதித்ததில்லை.
`கற்பு என்ன, கற்பு! ஒருத்திக்கு ஒருவன் என்பதே முட்டாள்தனம்!’ என்று பேசியவர் பெரியார்.
ஆகவே, நாகரிக உலகத்தில் ஒரு காட்டுமிராண்டி தர்மத்தை உருவாக்க வந்தவர்களே, நாத்திகர்கள்.
சில சுய மரியாதைத் திருமணங்களுக்கு நான் தலைமை வகித்திருக்கிறேன்.
தாலி அறுப்பதைப் பற்றியும், விதவையாவதைப் பற்றியும் சீர்திருத்தவாதிகள் பேசுவார்கள்.
சாதாரண மனித நாகரிகத்துக்கு ஒத்து வராத மடத்தனம் இது என்பது, அவர்களுக்கு மறந்தே போய்விட்டது.
எங்களூரில், `நாத்திகனை நம்பி வீட்டுக்குள் விடாதே’ என்பார்கள்.
`அவன் பண்பாடு தெரியாதவன். பவித்திரமில்லாதவன். யாருடைய பெண்டாட்டியையும் கை வைத்து விடுவான்’ என்பார்கள்.
தெய்வத்திற்குப் பயப்படாதவன் வேறு எந்த நியாயத்துக்குப் பயப்படுவான்?
பழைய காலங்களில் எது எது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அது அது அங்கங்கே இருந்தது.
இப்போதோ, கழுதை கட்டிலில் படுத்திருக்கிறது! யானை தொட்டிலில் தூங்க ஆசைப்படுகிறது; பூனை புல்லாங்குழல் வாசிக்க விரும்புகிறது; புள்ளிமான் உப்புக்கண்டமாகிறது.
நாகரிகத்திலேயே தர்மம் தடம் புரளுமானால், நாத்திகத்தின் விளைவு என்ன?
எனக்குத் தெரிந்தவரை, நாத்திகம் பேசிய உண்மையானவர்களில் பலர் சொத்தை இழந்தவர்கள். சில உத்தமத் தொண்டர்கள், பெண்டாட்டியை இழந்தார்கள்.
அக்கிரமக்காரர்கள் மட்டுமேதான் அனுபவித்தார்கள்.
பூஜை அறைக்கும், குளிக்கும் அறைக்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன்.
மல ஜலம் கழிக்கும் இடத்திலேயே சாப்பிட்டுப் பழகியவன் நாத்திகன்.
தாய்க்கும், தாரத்திற்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன்.
எதுவும் தாரம்தான் என்று கருதுகிறவன், நாத்திகன்.
தர்மம் தர்மம் என்று பயப்படுகிறவன், ஆத்திகன்.
அனுபவிப்பதே தர்மம் என்று நினைப்பவன், நாத்திகன்.
ஆத்திகன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாகச் சாகிறான்.
நாத்திகன், மனிதன் போலக் காட்சியளித்து, மிருகமாகச் சாகிறான்.
உண்மையிலேயே ஒருவன் நாத்திகம் பேசினால் அவன் உணர்ச்சியற்ற ஜடம்; ஆராயும் அறிவற்ற முடம்.
பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால், அது கடைசியாக இறைவனைக் கண்டுபிடிக்குமே தவிரச் சூனியத்தைச் சரணடையாது.