தோள்பட்டைக்கு என்ன முக்கியத்துவம் ?
உடலில் முக்கியமானது தோள்பட்டை. இந்தப் பகுதியை தவிர மற்ற எந்த எலும்புகளும், குறிப்பாக கால்மூட்டு, கணுக்கால் உள்ளிட்டவைகள் பல திசைகளிலும் சுழலக்கூடிய பகுதியாக இல்லை. ஆனால் தோள்பட்டையுடன் கூடிய கைகளை நாம் பல்வேறு திசைகளிலும் சுழலச் செய்யலாம். அதனால் எலும்பியல் மருத்துவத்தில் தோள்பட்டை மிக நுட்பமாக பார்க்கப்படுகிறது. இது இரண்டு கைகளை உடலுடன் இணைக்கும் பகுதியாகும்.
தோள்பட்டை வலி எதனால் ஏற்படுகிறது?
தோள்பட்டை பகுதியில் உள்ள தசைகளின் தளர்ச்சி, தசைநார்களின் தொடர்ச்சி அறுபடும்போது அதில் வலி ஏற்படும். இதுதவிர கழுத்தில் இருந்து ‘ஸ்காப்லா’ எலும்புப்பட்டை முழுவதும் படர்ந்து சற்று கீழ்பகுதி வரை உள்ள தசைப் பகுதியில் (ட்ரபீஷீயஸ்) ஏற்படும் தசை இறுக்கம், தளர்ச்சி உள்ளிட்ட காரணங்களாலும், தோள்பட்டை வலி ஏற்படும்.
யாரெல்லாம் எளிதில் பாதிக்கப்படுவர் ?
கம்ப்யூட்டர், அலைபேசி, ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், கடின பணிகள் செய்பவர்கள், தறியில் பணிபுரிபவர்கள், சுத்தியல் கொண்டு பணிபுரிவோர், கட்டடப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படும். இதுதவிர டென்னிஸ், கிரிக்கெட், விளையாட்டுக்களில் கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பவர்களுக்கு இது வரலாம். வயதானவர்களுக்கு தசைநார் ரத்த ஓட்டம் சீரின்மையால் அது கிழிந்து, தோள்பட்டை வலி ஏற்பட்டு, கைகளை துாக்க முடியாத நிலையும் ஏற்படும். நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு தோள்பட்டை மூட்டு உறை இறுக்கம் ஏற்பட்டு அதனால் வலியுடன் கைகளை இயக்க முடியாத நிலை ஏற்படும்.
பாதிப்பிற்கான அறிகுறிகள் என்ன?
மற்ற நோய்கள் போல், பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தெரியாமல் இருக்க வாய்ப்பு குறைவு. எலும்பு தேய்மானமோ, எலும்பு உடைந்திருந்தாலோ, அதிக வலி ஏற்பட்டு பாதிப்பை நோயாளிக்கு உணர்த்திவிடும். தோள்பட்டை வலியும் அதில் அடங்கும்.
வலியை போக்கும் மருத்துவ முறைகள் ?
பாதிப்பிற்கு உள்ளான தசை, பாதிப்பின் தன்மைக்கு ஏற்றவாறு உடற் பயிற்சி மூலம் குணப்படுத்திவிடலாம். நோயாளியின் பாதிப்பிற்கு ஏற்ற வகையில் ‘அல்ட்ரா சவுண்ட் தெரபி’, ‘எலக்ட்ரோ தெரபி’, ‘இன்செக் ஷன் தெரபி’ உள்ளிட்ட முறைகளில் பாதிப்புக்களை குணப்படுத்தலாம்.
பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
உடற்பயிற்சிகளை முறைப்படுத்த வேண்டும். பொதுவாக 18 வயது முதல் 30 வயதுக்குள் உடற்பயிற்சி செய்து உடல்திறனை பழக்கப்படுத்தியவர்களின் எலும்புகள் 60 வயது வரை திடகாத்திரமாக இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த முட்டை, பால், மீன் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, கீரை வகைகளை உணவில் எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சியை பழக்கப் படுத்திக் கொள்வது அவசியம்.
டாக்டர் பி.வனஜ்குமார்
எலும்பியல் சிறப்பு நிபுணர்,தேனி
95853 45060