நாகேந்திரனுக்கு துாக்கு சிங்கப்பூர் அரசு உறுதி
14 Nov,2021
போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாகேந்திரனுக்கு சட்டப்படி மரண தண்டனை நிறைவேற்றப்படும்' என, சிங்கப்பூர் அரசு மீண்டும் உறுதியாகத் தெரிவித்து உள்ளது.
மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம், 2009ல் சிங்கப்பூருக்கு ஹெராயின் என்ற போதை பொருள் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அடுத்தடுத்து நாகேந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீடுகள், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, நாகேந்திரனுக்கு கடந்த 10ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக தண்டனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மலேஷிய அரசு, நாகேந்திரனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி சிங்கப்பூர் அரசை வலியுறுத்தியது. இது தொடர்பாக மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசன் லுாங்கிக்கு கடிதம் அனுப்பினார்.
இதற்கு, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசன் லுாங்கி, வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், 'சிங்கப்பூர் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அதில் தலையிட முடியாது' என அவர்கள் குறிப்பிட்டு உள்ளதாக, மலேஷிய செய்தி நிறுவனமான 'பெர்னாமா' தெரிவித்துள்ளது. இதற்கிடையே மரண தண்டனையை நிறுத்தக் கோரி, ஐ.நா., சிறப்பு துாதர்கள் நான்கு பேர் சிங்கப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சிங்கப்பூர் அரசுக்கான ஐ.நா., துாதர் உமேஜ் பாட்டியா, ஐ.நா.,வில் பேசியதாவது:கடத்தலின் போது நாகேந்திரனுக்கு 18 வயதுக்கு உட்பட்டோரை போல அறிவாற்றல் குறைவாக இருந்ததாக கூறப்படுவதை, நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது; அதேசமயம் உடல் ரீதியிலான பிரச்னைகள் உள்ளதாகவும் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.