ஆபாச படம் பார்க்க மறுத்த 6 வயது சிறுமியை கல்லால் அடித்தே கொன்ற சிறுவர்கள்!
24 Oct,2021
ஆபாச படம் பார்க்க மறுத்த சிறுமியை சிறுவர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்திற்குட்பட்ட நிஜோரி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இரண்டு பேர், செல்போனில் ஆபாச படம் காட்டி தவறாக நடந்து கொள்ள முயன்றதாக தெரிகிறது.
அப்போது, பதற்றம் அடைந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் சொல்வதாக கூறி அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள கல் உடைக்கும் தொழிற்சாலைக்கு சிறுமியை இழுத்துச் சென்று கல்லால் அடித்து கொலை செய்தனர்.
பின்னர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று கல் உடைக்கும் ஆலையில் தங்கள் மகள் மயங்கிக் கிடப்பதாக சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அங்குச் சென்ற சிறுமியின் பெற்றோர் மகள் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் சிறுமியை அடித்து கொலை செய்த சிறுவர்களை கைது செய்தனர். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஒரு சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.