லட்ச தீவில் கைதான புலிகளின் புலனாய்வு சற்குணன்: இந்திய NIA சொல்வது என்ன ?
09 Oct,2021
என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்தவர் என்பது உறுதியாகியுள்ளது. லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் கடந்த மார்ச் மாதம் ஏ.கே 47 துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடந்த விசாரணையின் முடிவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அந்த 6 பேர் அளித்த தகவலின்பேரில் இலங்கையை சேர்ந்த சற்குணன் என்கிற சபேசன் என்பவர் கடந்த 5ம் திகதி சென்னையில் கைதாகியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள்களையும் ஆயுதங்களையும் கடத்தி விடுதலைப் புலிகள் அமைப்பை புதுப்பிக்கும் வேலைகளில் சற்குணன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. காரணம் இந்தியா தொடர்ந்தும் இலங்கையை, மிரட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் இலங்கை மசிந்த மாதிரி இல்லை. புலிகள் மீள உருவாகிறார்கள், என்று தற்போது இந்தியா தெரிவித்து வருவது இலங்கைக்கு பூச்சாண்டி காட்டும் விதமாக உள்ளது.
இது தொடர்பாக, கடந்த 6ஆம் தேதி என்.ஐ.ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ` அக்டோபர் 5 ஆம் தேதியன்று புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் சற்குணன் என்கிற சபேசன் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார். அதன்மூலம் கிடைத்த பணத்தை புலிகள் அமைப்பின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் புலிகள் அனுதாபிகளோடு அவர் சதிக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீமானின் பெயரும் அடிபடுகிறது. 2009ம் ஆண்டுக்கு பின்னர் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மெளனித்த பின்னர், அந்த இயக்கத்தில் உள்ள பலர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.
அவர்களில் சிலர் இவ்வாறு சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.