ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்களை வெளியேற்றும் முயற்சிக்கு தாலிபான்கள் இடையூறு ஏற்படுத்தினால், பேரழிவு தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. மேலும், தலைநகர் காபூல் உள்ள தூதரக அதிகாரிகளை ஒவ்வொரு நாடுகளும் திரும்ப அழைத்து வருகின்றன. அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் விமானங்களை அனுப்பி, தன்நாட்டு மக்களை பத்திரமாக அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
அப்போது பேசிய ஐநா பொதுச் செயலாளர் அன்டோனிய குட்டரெஸ், ஆப்கன் நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார். அங்குள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அங்கிருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள் மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிக்கவும் கேட்டுக்கொண்டார். மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கவலை அளிப்பதாகவும் கூறினார். எனவே, இக்கட்டான இந்த சூழலில் சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என்றும் அன்டோனியா குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு எந்த நோக்கத்திற்காக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் அனுப்பப்பட்டதோ அந்நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும், இனியும் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த அல்-கொய்தா அமைப்பு அழித்தொழிக்கப்பட்டு விட்டதாகவும், ஒசாமா பின் லேடனும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் பைடன் நினைவுகூர்ந்தார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்காகவோ, அந்நாட்டில் ஜனநாயகத்தை வேரூன்றுவதற்காகவோ அமெரிக்க படைகள் அனுப்பப்படவில்லை என்று குறிப்பிட்ட ஜோ பைடன், தங்களது ஒரே நோக்கம் அமெரிக்காவின் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாத தாக்குதலை தடுப்பது மட்டுமே என திட்டவட்டமாக தெரிவித்தார். அமெரிக்காவுக்கு எதிரான அச்சுறுத்தல் ஆப்கானிஸ்தானில் இன்று குறைந்திருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்க அதிபர், தேவை ஏற்பட்டால் மீண்டும் அமெரிக்கப் படைகள் ஆப்கானுக்கு திருப்பி அனுப்பப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு ஜோ பைடன் தான் காரணம் என்று, அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளனர். அவர், கொரோனாவுக்கு எதிரான போர், பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, அமெரிக்க படையை வாபஸ் பெற்றது என அனைத்திலும் தோல்வி கண்டதாக சாடினார். எனவே, இவற்றுக்கு பொறுப்போற்று அதிபர் பதவியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.