பாலூட்டும் தாய் மூலமாக தடுப்பு மருந்தின் ஆற்றல் குழந்தைக்குப் பரவாது- ஆய்வு
20 Jul,2021
பைசர்-பயான்டெக், மாடர்னா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் தற்போது அமெரிக்காவில் பல அரசு மருத்துவமனைகளில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.இதனை எடுத்துக்கொண்ட பல அமெரிக்கர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்தத் தடுப்பு மருந்துகள் பக்க விளைவை உண்டாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் கருவுற்றிருக்கும் தாய்மார்கள் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டால் இது கருப்பையில் உள்ள குழந்தையை பாதிக்குமா, மேலும் தாய்மார்கள் பாலூட்டும்போது தடுப்பு மருந்தின் வீரியம் குழந்தைக்கு செல்லுமா என்று அடுக்கடுக்காக பல கேள்விகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஓர் ஆய்வு முடிவை ஜாமா பீடியாட்ரிக்ஸ் என்கிற மருத்துவ இதழில் பிரசுரித்து உள்ளனர்.
ஏழு தாய்மார்களை வைத்து விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த 7 பேரும் பைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பு மருந்துகளின் 2 டோஸ் ஊசிகளை செலுத்தி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களது தாய்ப்பாலை அருந்திய அவர்களது குழந்தைகளின் உடலில் தடுப்பு மருந்துக்கான எந்த பாதிப்பும் இல்லை என இந்த விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.
தாய்ப்பால் மூலமாக தடுப்பு மருந்தின் வீரியம் குழந்தைகளுக்கு பரவ வாய்ப்பில்லை என்று இந்த ஆராய்ச்சி மூலம் அவர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பைசர், மாடர்னா தடுப்பு ஊசிகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.