கடன் வாங்கும் சூப்பர்நோவா' விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
11 Jul,2021
'சூப்பர்நோவா' எனப்படும் நட்சத்திர வெடிப்பு குறித்த புதிய தகவல்கள், நம் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விண்வெளியில் அதிக எடை உடைய நட்சத்திரங்கள் வெடித்து சிதறுவது, சூப்பர்நோவா என அழைக்கப்படுகிறது.அவ்வாறு அந்த நட்சத்திரங்கள் வெடிக்கும்போது, சூரியன் வெளிப்படுத்தும் ஒளியைவிட பல மடங்கு அதிகமான ஒளியை வெளிப்படுத்தும். மேலும் இந்த நட்சத்திரங்கள் சூரியனைவிட குறைந்தபட்சம், 25 மடங்கு அதிக எடையுடன் இருந்துள்ளன.இந்த நட்சத்திர வெடிப்பின் போது வெளியிடப்படும் ஒளி, மிக மிக பிரகாசமாக இருக்கும். மேலும், அந்த நட்சத்திரங்களில் இருந்து அதிக அளவில் வாயுக்களும் வெளியாகும். இவ்வாறு வெடித்து சிதறும் சிதறல்கள், விண்மீன்களாக பயணிக்கின்றன.இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர்நோவா குறித்து, உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்த ஆர்யபட்டா ஆய்வு மைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டு உள்ளதாவது:வழக்கமாக நட்சத்திரங்களின் வெடிப்பே, சூப்பர்நோவா என்றழைக்கப்படும். அது அந்த நட்சத்திரத்தின் எடை உள்ளிட்டவற்றை சார்ந்தது. ஆனால், 2020ல் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர்நோவா வித்தியாசமானது.இந்த நட்சத்திரம், மற்றொரு நட்சத்திரத்திடம் இருந்து சக்தியை கடன் வாங்கியுள்ளது.
இந்த நட்சத்திரம், மிகவும் பிரகாசமானதாக, ஹைட்ரஜன் மிகவும் குறைந்ததாக, மிக வேகமாக மாறும் தன்மையுடன் இருந்தது. அதே நேரத்தில் அதிக சக்திக்காக, மற்றொரு நட்சத்திரம் மற்றும் பிற வழிகளில் இருந்து நியூட்ரான்களை கடன் வாங்கியுள்ளது.நம் நாட்டில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளுடன், புதிதாக சேர்க்கப்பட்ட அதிநவீன தொலைநோக்கி வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.இவ்வாறு பழைய சூப்பர்நோவாக்கள் குறித்து ஆய்வு செய்தால், இந்த பிரபஞ்சம் குறித்து இதுவரை நாம் அறியாத பல ரகசியங்களை தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது