விமானத்தில் இருந்து திடீரென வெளியே குதித்த பயணி -லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பரபரப்பு
27 Jun,2021
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்த பயணி ஒருவர், திடீரென அவசரகால வாசல் வழியாக குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை, சால்ட் லேக் நகருக்கு புறப்பட்ட யுனைடெட் எக்ஸ்பிரஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதுகாப்பு சோதனைகள் முடிந்து, விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்ததும், ஒடுபாதையை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, உள்ளே இருந்த ஒரு பயணி திடீரென விமானத்தின் அவசர கால வாசல் கதவை திறந்து அதன் வழியாக வெளியே குதித்துள்ளார். இதனைக் கவனித்த பைலட், உடனடியாக விமானத்தை நிறுத்தினார்.
கீழே குதித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விமானம் டாக்சிவேயில் இருந்து மீண்டும் முனையத்திற்கு திரும்பியது.
அந்த பயணி அவசரகால கதவு வழியாக விமானத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, காக்பிட் கதவை பலமாக தட்டியதாக விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகவும், கீழே குதித்த பயணியின் நோக்கம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் விமானத்தில் பயணிகளின் அத்துமீறல் மற்றும் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 3000 சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.