மாணவி ஆபாச படம் கசிவு 'ஆப்பிள்' ரூ.35 கோடி இழப்பீடு
08 Jun,2021
அமெரிக்காவில் ஒரு மாணவியின் ஆபாசப் படம் கசிந்த விவகாரத்தில், 'ஆப்பிள்' நிறுவனம், 35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, பெகாட்ரன் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் உரிமம் பெற்று, அதன், 'ஐபோன்'களை பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இங்கு ஒரு மாணவி, தன் ஆப்பிள் ஐபோனை பழுது பார்க்க கொடுத்து உள்ளார். அதை, பெகாட்ரன் பொறியாளர்கள் இருவர் பழுது பார்த்துள்ளனர். அப்போது, அதில், மாணவியின் ஆபாசப் படங்களும் இருந்தன. அதை ரசித்ததுடன் நிற்காமல், மாணவியின் 'பேஸ்புக்' பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.
இதை, சக தோழியர் பார்த்து, அந்த மாணவியிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, வழக்கறிஞர்களை நாடினார். அவர்கள், 'பெகாட்ரன்' நிறுவனத்திடம், பல கோடி ரூபாய் இழப்பீடு கேட்டனர். அதற்கு, அந்நிறுவனம் மறுத்து விட்டது. இதையடுத்து, ஆப்பிள்நிறுவனம், பெகாட்ரன்வாயிலாக அந்த மாணவிக்கு, 35 கோடி ரூபாய் கொடுத்து, விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. சமீபத்தில் இதே போன்ற மற்றொரு பிரச்னையிலும், தனக்கு நேரடி தொடர்பில்லாத போதிலும், ஆப்பிள் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து, தன் பெயரை காப்பாற்றிக் கொண்டது. அமெரிக்க சட்டப்படி,தனி உரிமம் பெற்று இயங்கும் நிறுவனங்களின் பணி சார்ந்த சட்ட விரோத செயல்களுக்கு, அவற்றுக்குஉரிமம் அளித்த நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும்.