தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முக்கவசம் அணியுங்கள் - ஜோ பைடன்
13 May,2021
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், அந்நாட்டில் கொரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளது.
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுபூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு விட்டது.
இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான பொது இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதல் இடத்தில் இருந்து வந்த அமெரிக்கா தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தேவையில்லை என்று அறிவித்துள்ளது வைரஸ் பாதிப்பில் இருந்து அந்நாடு மீண்டு வருவதை வெளிக்காட்டுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் முக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தேவையில்லை என்ற அறிவிப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஓராண்டு கடின உழைப்பு மற்றும் அதிக அளவு தியாகங்களுக்கு பிறகு விதிமுறைகள் இப்போது மிகவும் எளிதானவை... கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வரை முகக்கவசம் அணியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.