பூமியெங்கும் மக்கள் தேடி அலைந்து கொண்டிருக்கும் ஆக்சிஜன் வாயுவை, சுமார் 30 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய்க் கோளில் தயாரித்து சாதனை படைத்திருக்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு. வேறொரு கோளில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
கடந்த ஆண்டு ஜூலையில் பெர்செவெரன்ஸ் என்ற உலவியுடன் நாசா அனுப்பிய மாக்சி கருவியின் உதவியுடன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறு பெட்டியைப் போன்ற வடிவத்தைக் கொண்ட மாக்சி, பெர்செவெரன்ஸ் உலவியின் வயிற்றுப் பகுதியில் வைத்து அனுப்பப்பட்டது.
இதே தருணத்தில் மற்றொரு சாதனை செவ்வாயில் படைக்கப்பட்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை செவ்வாயில் பறந்து விஞ்ஞானிகளைச் சிலிர்க்கச் செய்த இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர், மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாகப் பறந்திருக்கிறது.
தரையில் இருந்து சுமார் 5 மீட்டர் உயரத்துக்கு மேலே எழுந்து, 2 மீட்டர் தொலைவுக்கு நகர்ந்தது இன்ஜெனியூட்டி. பின்னர் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்து தரையிறங்கியது.
அடுத்தடுத்த சோதனைகளின்போது தொலைவு, உயரம், வேகம் ஆகியவற்றை அதிகரிப்பதற்கு நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆக்சிஜன் தயாரிக்கும் மாக்சியும், செவ்வாயில் பறக்கும் இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரும் விண்வெளித் திட்டங்களில் நாசாவின் புதிய முயற்சிகள். இரண்டுமே வெற்றியடைந்திருக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலையில் பெர்செவெரன்ஸ் உலவியுடன் அனுப்பப்பட்ட இவை, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயின் ஜெசேரோ பள்ளத்தில் இறங்கின.
செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதை ஆய்வு செய்வதுதான் நாசாவின் முதன்மையான திட்டம். பெர்செவெரன்ஸ் உலவி கூடிய விரைவில் அந்த வேலையைச் செய்ய இருக்கிறது.
செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டது எப்படி?
செவ்வாயின் வளி மண்டலம் 96% கார்பன் டை ஆக்சைடால் நிறைந்தது. ஆக்சிஜன் இருப்பதோ வெறும் 0.13 சதவிகிதம்தான். பூமியின் வளிமண்டலத்தில் 21 சதவிகிதம் ஆக்சிஜன் கலந்திருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆக்சிஜனைப் பிரித்தெடுப்பதை விட கார்பன் டை ஆக்சைடில் இருந்து ஆக்சிஜனைத் தயாரிப்பதே எளிது என விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். கார்பன் டை ஆக்சைடு வாயுவானது இரண்டு ஆக்சிஜன் அணுக்களையும், ஒரு கார்பன் அணுவையும் கொண்டது. இதில் இருந்து ஒரு ஆக்சிஜன் அணுவைப் பிரித்தெடுத்திருக்கிறது மாக்சி. மீதமிருந்த ஒரு கார்பன் மற்றும் ஒரு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட கார்பன் மோனாக்சைடு வாயு செவ்வாயின் வளி மண்டலத்திலேயே விடப்பட்டது.
செவ்வாயில் மாக்சி இயந்திரம் தயாரித்த ஆக்சிஜனின் அளவு வெறும் 5 கிராம்தான். இதைக் கொண்டு மனிதனால் 10 நிமிடம்தான் சுவாசிக்க முடியும். இதன் மூலம் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழலாம். விஞ்ஞானிகளின் பார்வை இதில் வேறு மாதிரியாக இருக்கிறது.
கார்பன் டை ஆக்சைடு செறிந்த செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்து உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை மாக்சி தயாரித்திருக்கிறது. இதே தொழில்நுட்பத்தில் சற்று பெரிய கருவியை உருவாக்கி விட்டால், விண்வெளி வீரர்கள் ஆக்சிஜனை பூமியில் இருந்து கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்காது.
செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும்போது அவர்கள் சுவாசிக்கவும், பூமிக்குத் திரும்பவதற்கான ராக்கெட்டுகள் செயல்படுவதற்கும் பல டன் ஆக்சிஜன் தேவை. அதைக் கொண்டு செல்வது கடினம், அதற்குப் பதிலாக மாக்சி போன்ற கருவியைக் கொண்டு சென்றால் போதும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.வரும் நாள்களில் வெவ்வேறு இடங்களில் மாக்சியைக் கொண்டு ஆக்சிஜனை தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மாக்சியால் ஒரு மணி நேரத்தில் 10 கிராம் வரை ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.
செவ்வாயின் வளிமண்டலம் மிகவும் மெல்லியது. பூமியில் இருப்பதில் வெறும் ஒரு சதவிகிதம்தான். அதனால் ஹெலிகாப்டர் பறப்பதற்குத் தேவையான காற்று கிடைக்காது.
ஈர்ப்பு விசையில் இருந்து மேலே எழும்பத் தேவையான இழுப்புவிசை செவ்வாயில் குறைவு. அது சாதகமான அம்சம். இருப்பினும் மிகக் குறைந்த எடையிலேயே இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டது. அதன் எடை வெறும் 1.8 கிலோதான்.
ஹெலிகாப்டரின் பிளேடுகள் 1.2 மீட்டர் நீளம் கொண்டவை. நிமிடத்துக்கு 2,500 முறை சுழலும். இது மிகவும் அதிகமான வேகம். செவ்வாயில் ஒலி பரவும் வேகத்தில் மூன்றில் இருபங்கு வேகத்தில் பிளேடுகளின் நுனிப்பகுதி இயங்கும்.
ஹெலிகாப்டர் தன்னிச்சையாக இயங்க வேண்டும். அதை ஒரு பொம்மையைப் போல பூமியில் இருந்து இயக்க முடியாது. ஏனெனில் பூமியில் இருந்து அனுப்பப்படும் கட்டளை 30 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து செவ்வாயை அடைவதற்கே 16 நிமிடங்கள் ஆகிவிடும்.
இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் அடுத்த 10 நாள்களில் இன்னும் 3 முறை பறக்க இருக்கிறது.