பல நாடுகளில், ராணுவம், போலீஸ் மற்றும் பயங்கரவாதிகள், பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் பாலியல் வன்முறை குறித்த ஆய்வறிக்கையை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பிரச்னை, பல நாடுகளில் பாலியல் வன்கொடுமைகள் பெருக வழி வகுத்துள்ளது.
18 நாடுகளில், 52 குழுக்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதற்கு நம்பகமான சாட்சியங்கள் உள்ளன.அவற்றில், 70 சதவீத குழுக்கள். தொடர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. அதில், பெரும்பாலானவை, ஐ.எஸ்., அல்லது அல் - குவைதா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவை.இக்குழுக்கள், பாலியல் வன்முறையை போர் தந்திரமாகவும், மக்களை அச்சுறுத்தி இடம்பெயர வைக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றன.
பாலியல் வன்முறையில் சில நாடுகளின் ராணுவம், போலீஸ் ஆகியவையே ஈடுபடுகின்றன. ஆப்பிரிக்க நாடான, காங்கோவில், 20 குழுக்கள் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் உள்ளன. இக்குழுக்களுடன், மாலி, தெற்கு சூடான், சிரியா, சூடான், ஈராக், சோமாலியா ஆகிய நாடுகளில் உள்ள குழுக்களும் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
ஈராக், சிரியா, ஏமனில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன.எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில், நுாற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைகளை சந்தித்துள்ளனர்.மியான்மரில், தத்மடாவ் பாதுகாப்பு படைகள் மற்றும் ராகின், சின், ஷான் மாகாணங்களில் உள்ள இனவாத குழுக்கள் மீதும், பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேற்கு ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில், ராணுவத்தினரும், பிரிவினைவாதிகளும் இணைந்து, 24 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதே போல, தெற்கு சூடான், சோமாலியா ஆகிய நாடுகளிலும் பாலியல் கொடுமைகள் நடந்துள்ளன.
இது போன்ற நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும்.அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை, உறுப்பு நாடுகள் ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.