கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்றளவும் உலகுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில்தான் முதன்முதலாக தோன்றியதாக தகவல்கள் வெளிவந்தன.
உகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசியவிடப்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த வைரஸ், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவுமையத்தின் தகவல்கள்படி, உலகின் 200 நாடுகளில் 13 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 903 பேரை நேற்று மதிய நிலவரப்படி தாக்கி இருக்கிறது. 28 லட்சத்து 87 ஆயிரத்து 909 பேரை கொன்றிருக்கிறது.
இந்த வைரசின் தோற்றம் குறித்து உலக சுகாதார நிபுணர்கள் உகான் நகருக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.
தவிரவும், ஆய்வுக்கூடத்துக்கு பதிலாக வன விலங்குகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் 24 பேர் ஒரே குடையின் கீழ் இணைந்து, கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி விரிவான புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த விஞ்ஞானிகள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிடைக்கக்கூடிய சிறந்த வழிமுறைகளைக் கொண்டு கொரோனா தொற்றுநோயின் தோற்றம் குறித்து முழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறோம். இது எந்தவொரு நாட்டின் மீதும் விரல்களை நீட்டும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை.
இந்த பேரழிவு எவ்வாறு தொடங்கியது என்பதை புரிந்து கொள்வதில் எந்தவிதமான முயற்சியையும் விட்டுவிடக் கூடாது என்பதுதான். எனவே அதற்கான முயற்சிகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க முடியும். அனைத்து மக்கள் மற்றும் அனைத்து நாடுகளின் நலனுக்காக இதைச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதம் எழுதுவதற்கு வழிநடத்திய அட்லாண்டிக் கவுன்சில் விஞ்ஞானி ஜேமி மெட்ஸில் இதுபற்றி கூறுகையில், “கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய இன்னும் விரிவான விசாரணைக்கு விடுக்கிற எங்களின் அழைப்பு, கொரோனா வைரஸ் குறித்த அதிக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளின் அவசியத்தை பிரதிபலிக்கிறது” என குறிப்பிட்டார்.
மேலும், இது சீனாவுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, “எதிர்காலத்தில் இதுபோன்ற மதிப்பாய்வுகளில் அமெரிக்க ஆய்வுக்கூடங்களும் இருக்க வேண்டும். இந்த தொற்று நோய் அவசரமானது. இந்த விரிவான விசாரணையை உடனே தொடங்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.