இஸ்லாத்தின் கடைசி நபியான முகமது (சல்-லல்-லாஹோ அலைஹி வஸல்லம் – அதாவது அவருக்கு அமைதி கிடைக்கட்டும்), கி.பி 630 இல் மெக்காவை வென்றதன் மூலம் தனது நீண்டகால கனவுகளில் ஒன்றை நனவாக்கினார்.
இதன் பின்னர் அவர் மெக்கா நகரிலிருந்து சிலை வழிபாட்டை முற்றிலுமாக ஒழிக்க உத்தரவு பிறப்பித்தார்.
மெக்காவில் முகமதின் இந்த மத வெற்றியில் ஆழமான அரசியல் அடையாளங்களும் மறைந்திருந்தன. மெக்கா புதிய மதத்தின் மையமாக அறிவிக்கப்பட்டது. எனவே, மெக்கா மீதான வெற்றி அல்லாவுக்கு கொடுத்த வாக்கை நிறைவு செய்வது போல இருந்தது.
நகரின் அனைத்து சிலைகளும் வைக்கப்பட்டிருந்த காபாவில் அதாவது சதுர கட்டிடத்தில் நுழைந்த பிறகு முகமது நபி அங்கிருந்து அனைத்து சிலைகளையும் அகற்றவோ அழிக்கவோ உத்தரவிட்டார்.
காபாவில் வைக்கப்பட்டிருந்த தெய்வங்களின் சிலைகளில் ஒன்று கன்னி இளம் பெண் மற்றும் அவரது சிறிய குழந்தையுடையது.
இந்த கிறிஸ்தவ சிலையை நோக்கி நகர்ந்த முகமது அதை தனது அங்கியால் மூடி மற்ற எல்லா சிலைகளையும் அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டார்.
இது உண்மையா அல்லது கட்டுக்கதையா? இந்த கேள்வி ஒரு பொருட்டல்ல. இந்த கதையை விவரிக்க நான் மேற்கோள் காட்டிய குறிப்பு குறைந்தது 1200 ஆண்டுகள் பழமையானது மற்றும் இஸ்லாமின் ஆரம்ப கால எழுத்துவடிவங்களை சேர்ந்தது.
இருப்பினும் இந்த கதையிலிருந்து அறியப்பட்ட விஷயம் என்னவென்றால், இஸ்லாமிற்கும் இயேசு நாதரின் சிலைக்கும் இடையே ஒரு நீண்ட வரலாற்று பாரம்பரியம் உள்ளது என்பதுதான்.
இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக இருந்து வரும் வரலாற்று தொடர்பு. உலகில் கிறிஸ்தவமல்லாத ஒரு மதத்திற்கும் ஹஸ்ரத் இயேசுவுக்கும் இடையிலான இந்த தொடர்பு தனித்துவமானது.
இதை முழுமையாக ஆழமாக விளக்க எனக்கு மிகப் பெரிய கேன்வாஸ் தேவைப்படும். அத்தகைய சூழ்நிலையில், இயேசுவிற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான இந்த இணைப்பின் மேலோட்டமான வரைபடத்தை எடுத்துக்காட்ட முயற்சிப்பதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.
இந்த உறவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணங்கள் மற்றும் தீர்க்கமான தருணங்களை மட்டுமே இங்கு நான் விவரிக்க உள்ளேன்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றி குர்ஆனில் என்ன எழுதப்பட்டுள்ளது?
முஸ்லிம்களின் புனித குர்ஆன், இஸ்லாமிய நாகரிகத்தின் அச்சாணி என்று கூறப்படும் ஒரு ஆவணம் ஆகும்.
அத்தகைய சூழ்நிலையில், இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் இயேசுவின் படத்தை உருவாக்கும் முயற்சி, குர்ஆனிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
குர்ஆனில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியில் முகமதுக்கு முன்பு இருந்த நபிகளின் வரலாறுகள் விவரிக்கப்படுகின்றன. அதில் பெரும்பாலானவற்றில் பைபிளின் (கிறிஸ்தவர்களின் புனித நூல்) மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன.
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா நபிகளையும் பார்க்கும்போது இயேசு மட்டுமே மிகப்பெரிய புதிர் என்று தோன்றுகிறது.
குர்ஆனில், வேறு எந்த நபிகளை காட்டிலும் மிகவும் அடிப்படையான முறையில் இயேசுவின் கதை விவரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யும்போது, ஹஸ்ரத் இயேசுவின் மிகவும் மாறுபட்ட தன்மை குர்ஆனில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலத்து கிறிஸ்தவர்கள் இயேசுவை பார்த்த கண்ணோட்டத்திற்கு மாறுபட்டதாக குர்ஆனில் இயேசுவின் அமைப்பு சித்தரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத்தெரிகிறது.
எந்த கிறிஸ்தவ வாசகனுக்கும் அல்லது கேட்பவனுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். குர்ஆனில் வேறு எந்த நபிகளையும் ஒப்பிடும்போது வரலாற்று நிகழ்வுகளாக இல்லாமல், மத வெளிச்சத்தில் இயேசு குறித்து எழுதப்பட்டுள்ளது.
இங்கே, ஹஸ்ரத் இயேசு தேவதூதரிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அவர் அவதாரம் எடுப்பதில்லை.அவர் மதத்தைப் போதிப்பவர் அல்ல. கிறிஸ்தவர்களின்படி அவர் அனுபவிக்க வேண்டிய துன்பத்தின் அடையாளமாகவும் இயேசு இல்லை.
குர்ஆனில், இயேசு தன்னை ஒரு கடவுள் என்று வர்ணிக்கவில்லை. கடவுள் என்று பார்த்தால் அவர் நேரடியாக கடவுளின் நிலைக்கும் வரவில்லை.
இந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் இயேசுவின் குணத்திலிருந்து பிரிக்கப்பட்டால், அவற்றின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வியை எந்த கிறிஸ்தவரும் எழுப்பக்கூடும்.
குர்ஆனில், ஹஸ்ரத் இயேசுவைப் பற்றிய குறிப்பு மீண்டும் மீண்டும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபிகள் வடிவத்தில் வருகிறது.
எல்லா தீர்க்கதரிசிகளிடையேயும் அவர் தனித்துவமானவர் என்று குர்ஆனால் வர்ணிக்கப்பட்டுள்ளார். அவர் அல்லாவின் அற்புதம், அல்லாவின் வார்த்தைகள் மற்றும் அவரின் ஆத்மா என்று கூறப்பட்டுள்ளது.
அவர் சமாதானத்தின் மிகப்பெரிய தூதர்; எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாமின் கடைசி நபியான முகமதின் வருகையை முன்னறிவிப்பதும் இயேசுதான். எனவே இஸ்லாமின் முன்னோடி தூதர் என்றும் இயேசுவை நீங்கள் அழைக்கலாம்.
இஸ்லாமிய கலாசாரத்துக்கு மத்தியில் வளர்ந்த இயேசுவின் படம்
உலகத்தின் ஊழிக்காலத்தில் வந்து உலகை அதன் இலக்குக்கு அழைத்துச் செல்லும் தீர்க்கதரிசி இயேசு என்று ஹதீஸில் (முகமது அவர்களின் போதனைகளின் தொகுப்பு) குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமின் சகாப்தத்தின் முடிவை அறிவிக்கும் தீர்க்கதரிசி இயேசு என்று சொல்வது இதன் பொருள். அவர் இஸ்லாமின் துவக்கத்திலிருந்து அதன் இறுதி வரை , இரண்டு திருப்பங்களிலும் நிற்பார்.
ஹாதிஸின் இந்த குறிப்புக்குப் பிறகு, இஸ்லாமிய இலக்கியத்தின் வளர்ந்து வரும் மரபுகளில், இஸ்லாம் தனது கொடியை நிலைநாட்டிய இடங்கள் அனைத்திலும் இயேசு ஒரு நபியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
இஸ்லாமிய இலக்கியங்களில் இயேசுவின் போதனைகள் மற்றும் அவை தொடர்பான நிகழ்வுகள் குறித்த ஒரு பெரிய தொகுப்பு உள்ளது.
அதை முஸ்லிம் தேவதூதர் என்று அழைக்கலாம் (நான் சமீபத்தில் இயேசு தொடர்பான அத்தகைய நிகழ்வுகளின் தொகுப்பை ‘தி முஸ்லிம் ஜீஸஸ்’ என்ற பெயரில் வெளியிட்டேன்) .இயேசுவின் போதனைகள் மற்றும் நிகழ்வுகளின் அதே தொகுப்புகளில் சிலவற்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:
‘தன் மனம் மூலமாக பார்க்கும் ஆனால் பார்ப்பதை மனம் விரும்பாத ஒருவர் அதிருஷ்டசாலி’ என்று இயேசு சொன்னார்.
மற்றொரு போதனை இவ்வாறு கூறுகிறது, ‘உலகம் ஒரு பாலம் , இந்தப் பாலத்தை நீங்கள் கடந்து செல்லுங்கள் ஆனால் அதில் எதையும் கட்டாதீர்கள்’ என்று இயேசு கூறுகிறார்.
மற்றொரு சிறிய நிகழ்வு இவ்வாறு விவரிக்கப்படுகிறது. ‘இயேசு ஒரு மனிதரைச் சந்தித்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்.
அந்த நபர், ‘நான் கடவுளின் காலடியில் என்னை அர்ப்பணிக்கிறேன்’ என்று பதிலளித்தார். உங்களை யார் கவனிக்கிறார்கள்? என்று இயேசு வினவினார்.
அந்த நபர், ‘என் தம்பி’ என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு சொன்னார், உங்கள் சகோதரர் உங்களைவிட கடவுளிடம் அதிக அர்ப்பணிப்புடன் இருக்கிறார்.’
இஸ்லாமிய இலக்கியங்களில் இயேசுவின் சுமார் முந்நூறு பிரசங்கங்களும் போதனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்யப்பட்ட இந்த சொற்பொழிவுகளில், ஹஸ்ரத் இயேசுவின் பங்கு மற்றும் அவரது அனைத்து வடிவங்கள் மூலமாக, இஸ்லாமிய கலாச்சாரத்தின் மீதான அவரது அன்பின் வெளிப்பாட்டை நாம் காண்கிறோம்.
இந்த இஸ்லாமிய வர்ணனைகளில் சில சமயங்களில் கர்த்தராகிய இயேசு ஒரு முற்றும் துறந்த துறவியாகவும், சில சமயங்களில் அவர் இஸ்லாமிய மறை ஞானத்தின் பாதுகாவலராகவும் தோன்றுகிறார். அவர் படைப்பு மர்மத்தின் தூதராக இருக்கிறார். இயற்கை மற்றும் மனிதனுக்கு நன்மை செய்கிறார்.
இயேசுவை சித்தரிக்கவும், இஸ்லாமிய இலக்கியத்தில் மிக முக்கியமான சில விஷயங்களான இயேசுவின் நீண்ட வரலாற்று போதனைகளை குறிப்பிடுவதற்கும் , நான் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு இப்போது திரும்புவோம்.
கி.பி 10ஆம் நூற்றாண்டில், பாக்தாதில் ஒரு பெரிய மறைஞானி இருந்தார். அவர் பெயர் அல்-ஹல்லாஜ். பிரபல பிரெஞ்சு அறிஞர் லூயிஸ் மெஸ்ஸினியோ, அல்-ஹல்லாஜின் வாழ்க்கையையும், சிலுவையில் அறையப்பட்ட விவரத்தையும் , ‘தி பேஷன் ஆஃப் அல்-ஹல்லாஜ்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
என் கருத்தை நீங்கள் நம்பினால், அல்-ஹல்லாஜ், சாக்ரடீஸ், காந்தி போன்ற ஒன்றிரண்டு புனிதர்கள் போல மனிதகுல வரலாற்றில் இயேசுவுடன் மிகவும் ஒத்த மனிதர்களில் ஒருவர்.
அல்-ஹல்லாஜுக்கும் இயேசுவிற்கும் இடையிலான ஒற்றுமைக்கு ஒரு முக்கிய காரணம், அவர் ஆன்மாவின் தன்மையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டார். ஆன்மா என்பது அன்றாட வாழ்க்கையின் விதிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று அவர் நம்பினார்.
இந்த உண்மையைத் தேடுவதன் காரணமாகவே தான் தெய்வீகத்திற்கு நெருக்கமாக இருப்பதாகக் அல்-ஹல்லாஜ் கூறினார். ஆனால், அல்-ஹல்லாஜுக்குள் சட்டத்தின் மீது பக்தி உணர்வும் இருக்கிறது, அவர் தனது உயிரைக் கொடுப்பதன் மூலம் அதை நிரூபிக்கிறார்.
எனவே அல்-ஹல்லாஜின் மரணம், சட்டத்தின் எல்லைக்குள் வருகிறது. இதன்மூலம் அவர் விதிகளுக்கு மேலே உயர்ந்து அதை வெல்ல முடியும். ஆகையால், ஒருமுறை அல்-ஹல்லாஜ் தனது சீடர்களிடம் இவ்வாறு அறிவுரை கூறினார். ‘நீங்கள் ஏன் ஹஜ்ஜிற்காக மெக்காவுக்குச் செல்ல வேண்டும்?
உங்கள் வீட்டினுள் ஒரு சிறிய பிரார்த்தனை அறையை உருவாக்கி, நம்பிக்கை உணர்வுடன் அதைச் சுற்றி வாருங்கள். இந்த வழியில் நீங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும். அல்-ஹல்லாஜின் முழு வாழ்க்கையுமே எழுதப்பட்ட விதிகளுக்கும் கடமைக்கும் இடையிலான வேறுபாடுகளின் பதிவாகும்.
அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் காணப்படுகிறது. அவர் மீதான விசாரணை, அவரது துயரமான கடைசி நாட்கள் மற்றும் மனதை நெகிழ வைக்கும் விதமாக அவர் சிலுவையில் அறையப்படுவதுடன் அது முடிவுக்கு வருகிறது.
அல்-ஹல்லாஜ் வழங்கிய தெளிவின் தரமானது, முஸ்லிம் மறைஞானத்திற்குள் இயேசுவின் வடிவத்தில் நெடுங்காலம் வாழ்ந்தது. ஹஸ்ரத் இயேசு, இஸ்லாமிய சூஃபித்துவத்தின் புரவலர் துறவியானார்.
வாருங்கள் இப்போது பிற்காலத்தை நோக்கி செல்வோம். இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த சமயபோரின் போது, ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகளுக்கும் மேற்கு ஆசியாவின் இஸ்லாமிய லஷ்கர்களுக்கும் இடையே சண்டை நிகழ்ந்தது.
சமையலறையில் கிடைத்த 600 ஆண்டு பழைய ஓவியம்; 2200 கோடி ரூபாய்க்கு ஏலம்
இயேசு பற்றி மகாத்மா காந்தி கூறியது என்ன?
அதிகரிக்கும் இடைவெளி
இந்தப் போரின் போது, சமாதானத்தின் தூதர் இயேசுவுக்கும், அவரைப் பின்பற்றுபவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் மிருகத்தனமான செய்கைகளின் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் வளர்ந்து வந்த இடைவெளியை சுட்டிக்காட்ட முஸ்லிம் அறிஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இஸ்லாமிய இலக்கியங்கள் மீண்டும் இயேசுவை ஏற்றுக்கொள்ள முயன்றன.
அவரது புதிய பாத்திரம் இஸ்லாமிய வேதங்களில் உருவாக்கப்பட்டது., சமயப்போரின் போது, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு எதிராக முஸ்லிம்களுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றார்.
இயேசுவின் பரம்பரைக்கான இந்தப் போரில், ஹஸ்ரத் இயேசு இஸ்லாமை சேர்ந்தவர் என்பதில் முஸ்லிம்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒரு விதத்தில், இது குர்ஆனில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் காட்சி போல இருந்தது. இப்போது இயேசு பற்றிய மேற்கோள் முன்னெப்போதையும் விட அதிகமாக இருந்தது.
நம்முடைய காலத்தை நோக்கி நாம் செல்லும்போது, முன்னர் விவரிக்கப்பட்ட இயேசுவின் பல வடிவங்கள் இன்றைய இஸ்லாமிய ஆன்மீக சிந்தனையில் இருப்பதைக் காண்கிறோம்.
இவற்றில் நான் குறிப்பாக இயேசுவின் இரண்டு உருவங்களை குறிப்பிட விரும்புகிறேன்: இதில் ஒன்று , அவர் இயற்கை மற்றும் மனிதனின் காப்பாளர்.
இதற்காக எனது வாசகர்களை டமாஸ்கஸுக்கு வடக்கே உள்ள சிட்னயா மடத்திற்கு அல்லது இரானின் ஷிராஸ் நகருக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
சிட்னயாவின் மடாலயம் கி.பி ஆறாம் நூற்றாண்டில் பைசாந்திய பேரரசர் ஜஸ்டினியனால் நிறுவப்பட்டது. இந்த ஆலயம் பள்ளத்தாக்கின் மேல் அமைந்துள்ள ஒரு உயரமான பாறையில் கட்டப்பட்டுள்ளது. தங்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு ஆசியை நாடி, இந்த மடத்தை நோக்கி பெண்கள் மற்றும் ஆண்களின் நீண்ட வரிசை காணப்படுகிறது.
இந்த பக்தர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வந்து கொண்டிருந்த இந்த கிறிஸ்தவ இடத்துக்கு அதே பயபக்தியுடன் இவர்கள் வருகிறார்கள்.
ஷியா இஸ்லாமில் இயேசுவின் வாழ்க்கை
இப்போது உங்களை ஷிராஸ் நகருக்கு அழைத்துச்செல்கிறேன். புகழ்பெற்ற நகரமான ஷிராஸ் , முஸ்லிம் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் புதையல் என்று கூறப்படுகிறது.
இது தவிர, கவிஞர்கள் மற்றும் சூஃபி புனிதர்களின் தோட்ட நகரமும் இங்கு உள்ளது. இதில் காயங்களை குணப்படுத்தும் இஸ்லாமிய மருத்துவ பாரம்பரியம் அல்லது இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்வு போல இன்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெரிய பாரசீக கவிஞர் ஹஃபீஸ் , ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பாரம்பரியத்தை தனது பார்வையில் செதுக்கியிருந்தார். இந்த வழியில், இலக்கியமாக இருந்தாலும் சரி, ஈரானின் பாரம்பரிய சிகிச்சையாக இருந்தாலும் சரி, இயேசுவின் காப்பாளர் அவதாரத்தின் வாழ்க்கை வடிவத்தை இங்கு காண்கிறோம்.
இரானில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா இஸ்லாமில், கி.பி 682 ஆம் ஆண்டில் நபிகள் நாயகத்தின் பேரன் ஹுசைன் செய்த உயிர் தியாகத்தை நினைவு கூர்வது ஒரு பெரிய ஆன்மீக நிகழ்வாக உள்ளது.
குறிப்பாக ஷியா இஸ்லாத்தில், இயேசுவின் வாழ்க்கை மற்றும் இறப்பு, ஒரு இணையான மத நிகழ்வு. இயேசு / ஹூசைன் இடையேயான இந்த ஒற்றுமை ஷியா இஸ்லாத்தின் மத அனுபவத்தில் எப்போதும் காணப்படுகிறது.
இப்போது நான் மற்றொரு கவிஞரைக் குறிப்பிட வேண்டும். ஈராக்கின் பத்ர ஷாகிர் அல் சயாப், இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அரபு கவிஞர் என்று அழைக்கப்படுகிறார். நாடு கடத்தல், சிறைவாசம், மோசமான உடல்நலம் மற்றும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். பத்ர ஷாகிரின் கவிதைகளின் வடிவம் மிகவும் நவீனமானது. ஆனால் அவரது கவிதை நடை முற்றிலும் மரபு சார்ந்தது.
அவருடைய கவிதைகளில், நவீன அரபு / இஸ்லாமிய இலக்கியங்களில், இயேசுவின் மிக ஆழமான மற்றும் மறக்கமுடியாத நினைவுகளைக் காணலாம். ‘சிலுவையில் அறையப்பட்ட இயேசு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பத்ர ஷாகிரின் ஒரு கவிதை, குறிப்பாக இயேசுபிரான் அனுபவித்த துன்பங்களை விவரிக்கிறது. இந்த கவிதையில், இயேசு , இயற்கையின் கடவுளாகவும், துன்பத்தில் இருப்பவர்களின் காப்பாளராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த கவிதையின், முதல் மற்றும் கடைசி வரிகளை இங்கே விவரிக்கிறேன்:
அவர்கள் என்னை சிலுவையில் இருந்து இறக்கியபோது காற்றின் ஒலி கேட்டது
அது மனம் வெதும்பி அழுதுகொண்டிருந்தது.
அதன் ஒலி இலைகளில் சலசலத்துக்கொண்டிருந்தது.
அதனுடன் கூடவே காலடிகளின் ஒசை என்னைவிட்டு விலகிச் சென்றது.
மதியம் மற்றும் மாலை முழுவதும் அவர்கள் என்னைத் சிலுவையில் தொங்கவிட்ட போதிலும், என் காயங்களாலும் கூட என் உயிர் பிரியவில்லை.
கடலுக்கும் அடியே மூழ்கிய ஒரு கப்பல் ஒரு கயிறால் இழுக்கப்படுவது போல, நகரத்திற்கும் நான் இருந்த மைதானத்திற்கும் இடையே கடந்து செல்லும் அழுகுரல்களை நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்.
அது குளிர்கால வானத்தின் நள்ளிரவு மற்றும் காலைக்கும் இடையில் ஒளியின் நூல் போல இருந்தது. தனது உணர்ச்சிகளை நீவிவிட்டவாறே, நகரம் தூங்கிவிட்டது.
நான் ஆரம்பத்திலும் இருந்தேன். அங்கு வறுமையும் இருந்தது. என் பெயரில் உணவு உண்ணும் விதமாக நான் மரித்துவிட்டேன்; காலம் வரும்போது அவர்கள் என்னை விதைக்க முடியும். நான் எத்தனை உயிர்களை வாழ வைக்க முடியும்! ஏனென்றால், தரையில் உள்ள ஒவ்வொரு கோடுகளையும் போல நான் ஒரு விதியாகிவிட்டேன், ஒரு விதையாக மாறிவிட்டேன்.
நான் மனிதர்களின் புதிய இனமாக மாறிவிட்டேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளிலும் என் ரத்தத்தின் ஒரு பகுதி அவன் இதயத்தில் உள்ளது, ஒரு சிறிய துளியாக.
அவர்கள் என்னை சிலுவையில் அறைந்தபோது, நான் கண்களை நகரத்தை நோக்கித் திருப்பியபோது, தரையையும் சுவரையும் கல்லறையையும் என்னால் பிரித்து அடையாளம் காண முடியவில்லை;
நான் பார்க்க முடிந்தவரை, காட்டில் ஒரு வசந்த காலம் போன்ற ஒரு காட்சி இருந்தது. அங்கு ஒரு சிலுவை இருந்தது, ஒரு தாய் அங்கு துக்கமாக இருக்கிறார். கடவுள் அதை பரிசுத்தப்படுத்தட்டும்.
இயேசுவின் மிகவும் செல்வந்த, மாறுபட்ட மற்றும் விரிவான தோற்றங்கள்
இந்தக்கவிதை விடுதலைக்கானது. அரசியல் மற்றும் மதத்திற்கானது. ஒரு காப்பாளராக, வெற்றியாளராக , அழிவின் விளைவைக் கொண்ட குரலில் இயேசுவின் தன்மையை நெசவு செய்யும் கவிதை இது. இந்த பூமியின் துன்புறுத்தப்பட்ட மக்களின் கடவுளாகிய இயேசு, கடவுளின் கடவுளான காப்பாளர்.
இந்தக்கவிதை வடிவத்தில் ஒரு நற்செய்தி உள்ளது. அதில் இயேசு வலியை அனுபவிக்கிறார். ஆனால் இறுதியில் வெற்றி பெறுகிறார் என்பதுபோல கற்பனை செய்யப்படுகிறார்.
அதனால்தான் இஸ்லாமிய கலாச்சாரத்தில் இயேசுவுக்கு மிகவும் செல்வந்த , மாறுபட்ட மற்றும் விரிவான தோற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நான் நம்புகிறேன், எந்த கிறிஸ்துவமல்லாத கலாச்சாரத்திலும் இல்லாத அளவிற்கு இது மிக அதிகம்.
இயேசுவின் வரலாற்று தன்மை மற்றும் அழிவில்லாத இயேசு ஆகிய இரு வடிவங்களுக்கும் இடையே இவ்வளவு இணைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டிய வேறு எந்த மதமும் என் அறிவுக்கு எட்டியவரை இல்லை. இன்றைய ஆபத்தான மற்றும் மிகவும் குறுகிய எண்ணம் கொண்ட சகாப்தத்தில், இந்த இஸ்லாமிய பாரம்பரியத்தை நாம் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இந்த கதையின் சாராம்சம் மிகவும் தெளிவாக உள்ளது. ஒரு மதம் உண்மையில் அதன் பின்னர் வந்த மதத்தின் முன்னோடி. ஒரு மதம் அதன் தியாகம் அல்லது சாட்சியத்திற்காக முந்தைய மதத்தின் உதவியை நாடுகிறது. இரண்டு மதங்களுக்கிடையில் பரஸ்பர சார்புநிலைக்கு சிறந்த உதாரணம், இயேசு மற்றும் இஸ்லாமை விட வேறு எதுவும் இருக்க முடியாது.
கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை குறிப்பாக இயேசு மீதான ஈடுபாடு என்பதன் பொருள், வேறு எந்த மதத்தில் அவர் விரும்பப்படுகிறார், பாராட்டப்படுகிறார் என்பதை அறிந்து கொள்வதாகவும் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.