மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 பரவல் மீண்டும் தீவிரம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
05 Mar,2021
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குநர் ஹன்ஸ் குளூக் கூறுகையில், ‘ஐரோப்பிய நாடுகளில் புதிதாகக் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 6 வாரங்களாகக் குறைந்து வந்தது. ஆனால், கடந்த வாரம் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து, சுமார் 10 இலட்சமாக இருந்தது.
இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கொரோனாவின் தீவிரம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கொரோனா பரவல் அதிகம் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அதன் தீவிரம் அதிகரித்துள்ளது.
எனவே, மீண்டும் அடிப்படையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் பின்பற்ற வேண்டும். அத்துடன், கொரோனா தடுப்பூசி திட்டங்களையும் விரிவுபடுத்த வேண்டும்’ என கூறினார்.