சமையலுக்கான நேரத்தை குறைத்து பிடித்தமான செயலுக்கும் நேரம் ஒதுக்கும் பெண்கள்
04 Mar,2021
10 பெண்களில் 6 பேர் சமையலுக்காக செலவிடும் நேரத்தை குறைத்திருக்கிறார்கள். அதில் மிச்சப்படுத்தும் நேரத்தை தங்கள் தனிப்பட்ட நலனுக்காக செலவிடுகிறார்கள் என்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 பெண்களில் 6 பேர் சமையலுக்காக செலவிடும் நேரத்தை குறைத்திருக்கிறார்கள். அதில் மிச்சப்படுத்தும் நேரத்தை தங்கள் தனிப்பட்ட நலனுக்காக செலவிடுகிறார்கள் என்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது. அங்கு 75 சதவீத பெண்கள் தங்களுக்கு பிடித்தமான செயல்களை செய்வதற்கு தினமும் சராசரியாக 30 நிமிடங்களை ஒதுக்கிவிடுகிறார்கள். சமைப்பதற்கு குறைவான நேரத்தை செலவிடுவது தங்களது தனிப்பட்ட நலன்களை பேணி காக்க உதவுகிறது என்பது 84 சதவீத பெண்களின் கருத்தாக இருக்கிறது.
ஆனாலும் அவர்கள் வெளி உணவுகளை விட வீட்டில் சமைக்கும் உணவைத்தான் ஆரோக்கியமாக கருதுகிறார்கள். சர்வேயின் படி, தினமும் சமையலுக்கு 100 நிமிடங்களையும், குழந்தை பராமரிப்புக்கு 133 நிமிடங்களையும் சராசரியாக செலவிடுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, கடைக்கு சென்று பொருள் வாங்குவது போன்ற வேலை களுக்கும் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.
40 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்களை பொறுத்தவரை, 61 சதவீதம் பேர் சமையல் மற்றும் குழந்தை பராமரிப்புக்கு அதிக நேரம் செலவிடுகிறார்கள். பண்டிகைகள், திருவிழாக்கள், வீட்டு விசேஷங்கள் நடக்கும் சமயங்களில் வீட்டு வேலைகள் அதிகரிப்பதாக 97 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள். சமையல், துப்புரவு பணிக்குத்தான் அதிக நேரம் செலவாகுவதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
வீட்டில் பாலின சமத்துவம் நிலவ வேண்டும் என்பதும் பெண்களின் விருப்பமாக இருக்கிறது. அதேவேளையில் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதில் இளம் தலைமுறையினரிடையே ஆர்வம் அதிகரித்து வருவதும் சர்வேயில் தெரியவந்துள்ளது. 21-25 வயதுக்குட்பட்ட பெண்களில் 74 சதவீதம் பேர் தங்கள் கணவர் வீட்டு வேலைகளில் உதவி செய்வதாக குறிப்பிடுகிறார்கள். இது மிகவும் பாராட்டத் தகுந்ததாக இருக்கிறது.
பத்தில் ஒன்பது ஆண்கள் மனைவியுடன் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது சர்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. தானே, நவி மும்பை, மும்பை, புனே போன்ற நகரங்களில் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.