உலகின் மிக அதிக விஷமுள்ள பாம்பை விழுங்கிய தவளை
07 Feb,2020
எவ்வளவு பெரிய பலசாலியானாலும் பாம்பை கண்டால் அலறியடித்து ஓடுவார்கள். தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் உணவாக உட்கொள்வது வழக்கம். ஆனால், ஆஸ்திரேலியா நாட்டில் பெண்ணின் தோட்டத்தில் பாம்பு ஒன்றை தவளை உணவாக விழுங்கியுள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டவுன்ஸ்வில்லே பகுதியில், பாம்புகளை மீட்டு அதனை பாதுகாப்பான சூழலில் விட்டு விடும் பணியில் ஜேமீ சேப்பல் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தொலைபேசி வழியே அழைப்பு விடுத்து உள்ளார். அதில் தனது வீட்டின் பின்புற தோட்டத்தில் பாம்பு ஒன்று உள்ளது என அவர் கூறியுள்ளார்.
இதனால் அதனை பிடிப்பதற்காக சேப்பல் கிளம்பி சென்றுள்ளார். இதனிடையே, அந்த பெண் மீண்டும் சேப்பலுக்கு தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு, தவளை ஒன்று அதனை சாப்பிட்டு கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.
நிலத்தில் வாழ கூடிய, கோஸ்டல் தைப்பான் என்ற பெயர் கொண்ட இந்த வகை பாம்பு உலகின் மிக அதிக விஷம் கொண்ட பாம்பு வகைகளில் 3வது இடத்தில் உள்ளது.
இந்த பாம்பு கடிக்கும்பொழுது, அதிகளவில் விஷம் முழுவதும் வெளியேற்றப்படும். இந்த விஷம் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். ரத்தம் உறையும் தன்மையையும் பாதிக்கும். இதனால் தலைவலி, குமட்டல், முடக்குவாதம், உட்புற ரத்த கசிவு மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும்.
எனினும், பாம்பு ஒன்றை தவளை விழுங்கியுள்ளது அவருக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது. அதனை உயிருடன் மீட்பதற்கு சேப்பல் விரும்பியுள்ளார். ஆனால், அந்த தவளை அவர் சென்று சேர்வதற்குள் அதனை விழுங்கி இருந்தது. பச்சை நிறத்துடன், தோட்டத்தில் வசிக்கும் வகையை சேர்ந்த அந்த தவளையை சிலர் வளர்ப்பு பிராணிகளாகவும் வளர்த்து வருவதுண்டு.
ஆனால், தவளை மீண்டும் அதனை உயிருடன் வெளியே கக்கி விட்டால் அந்த பெண்ணின் தோட்டத்தில் சென்று பதுங்கி விடும் ஆபத்து உள்ளது என நினைத்த சேப்பல், தவளையை எடுத்து கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். தவளை உயிருடன் இருக்காது என அவர் நினைத்து உள்ளார். ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் அது நடக்கவில்லை. தவளை நலமுடன் இருந்தது. தனது முகநூல் பதிவில், தவளையை வெளியே விட்டு விடுவேன் என சேப்பல் தெரிவித்து உள்ளார்