“சிலசமயம், தொழிலதிபர்களிடம் பாலியல்ரீதியாக இச்சையைத் தூண்டி பணம் வசூலிப்பதும் நடந்துள்ளது. அழகிய இளம் பெண்களுடன் நித்தி அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதே பாலியல் சபலங்களை பொதுவெளியில் விதைக்கச் செய்யும் ஓர் உத்திதான்”
‘ஞான அஞ்சனம்’. இந்தப் பெயரை கேட்டாலே அதிர்கிறார்கள் நித்தியானந்தாவிடமிருந்து பிரிந்து வந்தவர்கள். “பல ஆண்டுகளாக எங்களை வசியப்படுத்தி வைத்திருந்ததே இந்த ஞான அஞ்சனம்தான்” என்று சொல்லி நம்மை அதிரவைக்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள். `வசிய மை தடவி வலைக்குள் விழவைத்துவிட்டார்’ என்றரீதியில் இருக்கின்றன அவர்கள் சொல்லும் சம்பவங்கள்.
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் நடைபெறும் 21 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்கச் சென்றுள்ளார், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன். பிடதிக்குச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. ஒருகட்டத்தில் `சந்நியாசி ஆகப்போகிறேன்’ என்றார் இளைஞர்.
அதிர்ந்துபோன பெற்றோர், பிடதிக்குச் செல்கிறார்கள். மகனை மீட்க பலகட்டப் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அவை அவ்வளவு சுலபமானதாக இல்லை.
‘உங்கள் மகன் வந்தால் அழைத்துச் செல்லுங்கள். நாங்கள் என்ன கட்டிப்போட்டா வைத்திருக்கிறோம்?’ என்று கூளாகச் சொல்கிறார்கள் ஆசிரம நிர்வாகிகள். மகனிடம் பேசினால் பதிலுக்கு, ‘ம்ம்ம்ம்… நித்தியானந்தா பரமஹம்ச யோகம். ம்ம்ம்ம்… நித்தியானந்த பரமஹம்ச யோகம்…’ என்று மந்திரம்போல் உச்சாடனம் செய்கிறார்.
ஒருவழியாக அரசியல் பிரமுகர் ஒருவர் மூலம் சில மாதங்களுக்குப் பிறகு ஆசிரமத்திலிருந்து மகனை மீட்டிருக்கிறார்கள். ஆனால், வீட்டுக்கு வந்த பிறகும் மகனின் நடவடிக்கையில் மாற்ற மில்லை. தினமும் காலையில் நித்தியானந்தாவின் புகைப்படத்துக்கு பூஜைசெய்வது, அவரது பெயரை சதாசர்வ காலமும் உச்சரிப்பது என்றிருக்கிறார் இளைஞர்.
கடும் வேதனையடைந்தவர்கள், மகனை மனோதத்துவ நிபுணர் ஒருவரிடம் அழைத்துச் சென்றனர். அவர், “உங்கள் மகனை உளவியல்ரீதியாக அடிமையாக்கிவைத்துள்ளார் அந்தச் சாமியார்.
அவரின் பெயரை உச்சரிப்பதையும், அவர் படத்துக்கு பூஜைசெய்வதையும் முதலில் தடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறியுள்ளார்.
அதை கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய ஆரம்பித்த பிறகுதான் அந்த இளைஞர் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளார். முதுகலைப் பட்டம் பெற்ற அந்த இளைஞர், பிடதிக்குப் போகும் முன்பு எல்லோரையும்போல் சராசரி இளைஞராக இருந்தவர்தான்.
நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்ற பிறகே பெற்றோரையே மறந்து, மறுக்குமளவுக்கு மனரீதியாக மாற்றமடைந்துள்ளார்.
நம்மை நேரில் சந்தித்த அவரிடம், “எப்படி இது நேர்ந்தது?” என்று கேட்டால் “அதுதான் எனக்கும் புரியவில்லை” என்று சில தகவல்களை மட்டும் நம்மிடம் சொல்லி அதிரவைத்தார்.
தீட்சையே திறவுகோல்!
“நித்தியானந்தாவின் பின்னால் இத்தனை பெண்பக்தர்கள், ஆண்பக்தர்கள் திரள்வதற்கு அடிப்படைக் காரணமே அவர் அளிக்கும் 21 நாள் பயிற்சி முகாம்தான்.
ஆரம்பத்தில் யோகம், தியானம், ஆன்மிகச் சொற்பொழிவு என்றுதான் பயிற்சி ஆரம்பிக்கும். ஒருகட்டத்தில் `நித்தியானந்தாவின் நேரடி தீட்சை’ என்ற நிகழ்வு அரங்கேறும். முகாமில் கலந்துகொள்பவர்கள் வரிசையாகச் சென்று நித்தியானந்தாவின் முன் அமர வேண்டும்.
அவர்கள், நித்தியானந்தாவின் கண்களை நேருக்குநேர் சில நொடிகள் பார்க்க வேண்டும். அப்போது பக்தர்களின் இரு கண்களுக்கு இடையிலான நெற்றிப்பொட்டில் நித்தியானந்தா தன் விரலை வைத்து அழுத்துவார்.
பிறகு, கறுப்பு நிற மையை அங்கு தடவிவிடுவார். அப்போது எங்களையும் அறியாமல் உடலுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அந்தக் கறுப்பு மைக்கு ஆதினத்தில் சொல்லப்படும் பெயர் ‘ஞான அஞ்சனம்’. நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்ற அனைவருமே அந்த மையை தினமும் தங்களது நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு, நித்தியானந்தாவின் பாத அட்டிகை என்று அவர் அணியும் செருப்பின் மாதிரியை சிறிய அளவில் வெண்கலத்தில் செய்து வைத்திருப் பார்கள்.
தீட்சை பெற்றவர்களுக்கு அதைக் கொடுத்து, `தினமும் காலை எழுந்தவுடன் அதற்கு பூஜை செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தப் படுவார்கள். தினமும் அதிகாலை எழுந்ததும் ‘ம்ம்ம்ம்… நித்தியானந்த பரமஹம்ச யோகம்’ என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஞான அஞ்சனத்தை நெற்றியில் பூசியதுமே பலர் நித்தியானந்தாவின் பேச்சுக்கு மகுடிபோல் ஆட ஆரம்பிப்பர். இப்படித்தான் அவரின் பிடியில் பலரும் சிக்கியுள்ளார்கள்” என்றார்.
அதென்ன ‘ஞான அஞ்சனம்’?
நித்தியானந்தா மீது புகார் கொடுத்திருக்கும் ஜனார்த்தன சர்மாவிடம், “ஞான அஞ்சனம் என்றால் என்ன?” என்று கேட்டோம்.
“அது ஒருவிதமான மை. நித்தியானந்தாவுக்காக கேரளத்திலிருந்து அந்த மை கொண்டுவரப்படுகிறது. அனைவரும் அதை கண்டிப்பாக நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். முதல்முறை மட்டும் அந்த மையை நித்தியானந்தா நமக்கு வைத்துவிடுவார். அதற்குப் பிறகு மை டப்பாவை நம்மிடம் கொடுத்துவிடுவார்கள்.
அந்த மையை வைத்துக்கொண்டு நித்தியானந்தாவின் பெயரை தினமும் உச்சரித்துக்கொண்டிருக்கும் நபர்களை நித்தியானந்தா பிடியிலிருந்து மீட்பது கடினம்” என்றார் அச்சம் விலகாமல்.ஞு
சதுரங்க வேட்டையாடிய நித்தி!
நித்தியானந்தாவுக்கு இந்தியாவில் தற்போது 300 ஆசிரமங்கள் இருக்கின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அவர்வசம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில்தான் நித்தியின் சொத்து பலமடங்கு பெருகியிருக்கிறது. அதற்கு தன்னிடம் வருபவர் களிடம் அவர் ஆடிய சதுரங்க வேட்டையும் ஒரு காரணம் என்கிறார்கள்.
“நித்தியானந்தாவின் பக்தர்கள், உலகம் முழுவதும் வசிக்கிறார்கள்.
வசதிபடைத்த பலர், ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கியிருப்பார்கள். அவர்களைச் சந்திக்கும் நித்தியின் பக்தர்கள், ‘சுவாமிஜியைச் சந்தித்துவாருங்கள். உங்கள் பிரச்னைகள் நொடியில் விலகிவிடும்’ என்று வலைவிரிப்பார்கள்.
சரியென்று நித்தியைச் சந்திக்கச் சென்றால் போதும்… அடுத்து சதுரங்க வேட்டை ஆரம்பமாகும். பிரச்னையைச் சொல்லி தன்னிடம் தீர்வு கேட்பவர் களிடம் தன் வார்த்தை ஜாலத்தால் முதலில் வசியப்படுத்துவார் நித்தியானந்தா. பிரச்னைக்குத் தீர்வாக ஒரு பரிகாரத்தைச் செய்யச் சொல்வார்.
சிக்கியவர்களின் வசதிக்கேற்ப, ‘கோயில் கட்டினால் சரியாகும்’, ‘கோசாலை அமையுங்கள்’, ‘தங்கத் தேர் செய்து ஆசிரமத்துக்கு அளியுங்கள்’ என்று விதவிதமாக பரிகாரங்கள் சொல்வார்.
ஆனால், இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரடியாகச் செய்ய முடியாது. ஆசிரமத்திடம் தொகையைத் தந்துவிட வேண்டும்.
இப்படி பலரிடம் இடமாகவும், தொகையாகவும், தங்க நகைகளாகவும் பெற்றதே பல நூறு கோடி ரூபாய் தேறும். பரிகாரமாக இவர்கள் சொன்ன எதையும் ஆசிரமத்தினர் செய்ததில்லை” என்று கொந்தளிக்கிறார்கள் நித்தியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்.
பெண் சிஷ்யைகளைவைத்து வலை!
நித்தியானந்தாவின் விவகாரம் வெளியே வந்துகொண்டிருக்கும் நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.
“எங்களைப் போன்ற பெண் சிஷ்யைகளை, தொழிலதிபர்களைச் சந்திக்க அனுப்புவார் சுவாமிஜி. தொழில் அதிபர்களிடம் நித்தியானந்தாவின் அருமை பெருமைகளைப் பேசி பணத்தைக் கறக்க வேண்டும் என்பதே எங்களுக்குத் தரப்பட்ட அசைன்மென்ட். அப்படி பலரிடமிருந்து பத்து லட்சம் முதல் மூன்று கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளோம்.
சிலசமயம், தொழிலதிபர்களிடம் பாலியல்ரீதியாக இச்சையைத் தூண்டி பணம் வசூலிப்பதும் நடந்துள்ளது. அழகிய இளம் பெண்களுடன் நித்தி அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதே பாலியல் சபலங்களை பொதுவெளியில் விதைக்கச் செய்யும் ஓர் உத்திதான்.
அகமதாபாத் ஆசிரமத்தில் குஜராத் பொலிஸார் பறிமுதல் செய்த இரண்டு லேப்டாப்களில் இதுபோன்ற அந்தரங்கமான பல வீடியோக்கள் இருக்கின்றன” என்றார்கள். நித்தியானந்தா பிடதியில் இருந்தவரை அந்த ஆசிரமத்தில் 25 பெண் சீடர்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் 13 பேர் நித்தியின் ஆஸ்தான சிஷ்யைகள்.
நித்தியானந்தாவுக்கான பணிவிடை களை அந்தப் பெண் சிஷ்யைகள் மட்டுமே செய்ய வேண்டும். அந்த 13 பேரையும் அழைத்துக் கொண்டுதான் வெளிநாட்டுப் பயணத்தையே மேற்கொண்டுள்ளார் நித்தி. அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் சில பெண்பக்தைகளும் உடன் இருக்கிறார்கள்.
தற்போது மூன்று ஆண் சீடர்கள் மட்டுமே நித்தியுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள் பிடதி ஆசிரமத்தில் இருப்பவர்கள்.
இன்டர்போல் ஆக்ஷன்!இவ்வளவு களேபரங்களுக்குப் பிறகு, நித்தியானந்தாவைப் பிடிக்க இன்டர்போல் அமைப்பின் உதவியை நாடியிருக்கிறது குஜராத் காவல்துறை. அவரது பெயரை ‘ரெட் ரிப்போர்ட்’ என்றழைக்கப்படும் அபாயகரமான பட்டியலில் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு.
இதற்கிடையே குஜராத், அகமதாபாத் மாவட்டம், ஹீராபூரில் செயல்பட்டுவந்த நித்தியின் ஆசிரமத்தை அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் சீல் வைத்துள்ளது குஜராத் காவல்துறை.
`ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் இருவரையும் டிசம்பர் 10-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என்று குஜராத் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது அகமதாபாத் உயர் நீதிமன்றம். நித்தி, இதற்கெல்லாம் அசரவேயில்லை… ‘நான் உருவாக்கப்போகும் கைலாசா தீவுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தேவை’ என்று ஆன்லைனில் விளம்பரம் கொடுத்துள்ளார் நித்தி!
-“குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுங்கள்!”
“மை தடவி ஒருவரை வசியப்படுத்த முடியுமா?” என்று சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதியிடம் கேட்டோம்.
“விஞ்ஞானத்துக்குப் பொருந்தாத விஷயங்களைப் பேச முடியாது. பொதுவாக, பெரியளவில் பிரச்சி னையில் சிக்கியவர்களே சாமியார்களிடம் செல்வார்கள்.
சாமியாரைப் பற்றி ஏற்கெனவே இவரிடம் ஏற்படுத்தப் பட்டிருக்கும் மாய பிம்பங்கள், ‘அவரிடம் சென்றால் பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்பதை அவர்களின் ஆழ்மனதில் பதியச்செய்திருக்கும். தவிர, பிரச்சினைகள் ஏற்படுத்திய காயங்களால் மனச்சோர்வு ஏற்பட்டு, அது மன அழுத்தத்தில் தள்ளிவிடும். அப்படியான சூழலில் அவர்களின் சிந்திக்கும் திறன்
மங்கிவிடும். இதனால், பிடியைக்கண்ட கொடியைப்போல் ஆறுதலாகப் பேசும் சாமியார்கள்வசம் வீழ்ந்துவிடுவார்கள்.
லெளகீக வாழ்வில் பிரச்சினைகள் அனைவருக்குமே ஏற்படும்தான். இதை, தங்களுக்கு நெருக்கமான குடும்ப உறவுகளிடம் மனம்விட்டுப் பேசினாலே சரிசெய்துவிடலாம். அப்போதும் சரியாகவில்லையெனில், மனநல நிபுணர்களிடம் கவுன்சலிங் பெறலாம்.
சட்டரீதியான பிரச்சினைகள் என்றால் சட்ட நிபுணர்களை அணுக லாம். ஆனால், குடும்பத்திலோ நட்பு வட்டாரத்திலோ ஆறுதலுக்குக்கூட யாரும் பேச முன்வராதபோதுதான் இதுபோன்ற சாமியார்களிடம் மக்கள் சரணாகதி அடைந்துவிடுகிறார்கள். எனவே, முதலில் ஈகோ பார்க்காமல் மனம் விட்டுப் பேசுங்கள்” என்றார்.