சென்னையில் சொத்துக்காக மாமியாரைக் கடத்திய மருமகள்
28 Nov,2019
`சொத்துக்காக என்னைக் கடத்தியவர்கள் கொடுத்த உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்று பயந்து அதை நான் சாப்பிட மறுத்துவிட்டேன்’ என்று கண்ணீர்மல்க மாமியார் பத்மினி கூறினார்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள படப்பையைச் சேர்ந்தவர் சுப்பராயன். கான்டிராக்டர். இவரின் மனைவி பத்மினி (65). இந்தத் தம்பதிக்கு செந்தில், ராஜ்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் செந்திலுக்கும் பெரியபாளையம் அருகே உள்ள கொமக்கம்பேடுவைச் சேர்ந்த மேனகா (29) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இரண்டாவது மகன் ராஜ்குமாருக்கும் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ஆனந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு சுப்பராயன் குடும்பத்தில் சொத்துத் தகராறு ஏற்பட்டது. சொத்துக்காக தம்பி என்றுகூட பாராமல் ராஜ்குமாரை கூலிப்படையை வைத்து செந்தில் கொலை செய்தார்.
இதுதொடர்பாக மணிமங்கலம் போலீஸார் செந்திலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த செந்தில், தலைமறைவாகிவிட்டார்.
மாமியார் பத்மினி
இதையடுத்து, தன்னுடைய சொத்துகளை இரண்டு மகன்களின் குடும்பத்தினருக்குப் பிரித்துக் கொடுத்தார் சுப்பராயன். அதன்பிறகும் சுப்பராயன் பெயரில் ஒரு வீடு மற்றும் நிலம் இருந்தது.
அதையும் தங்களுக்கு எழுதித்தரும்படி சுப்பராயனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சுப்பராயன் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மணிமங்கலம் போலீஸார், மேனகாவின் தோழியின் கணவர் ராஜேஷ்கண்ணாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவரை இழந்த பத்மினி, படப்பையில் உள்ள வீட்டில் தனியாக வசித்துவருகிறார்
இதையடுத்து பத்மினியை காரில் ஏற்றிக்கொண்டு மேனகா, பல இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்றார். பத்மினியை மேனகா காரில் அழைத்துச் சென்ற தகவல் கிடைத்ததும் அமுதா, அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய சித்தி பத்மினியை அவரின் மருமகள் மேனகா கடத்திவிட்டதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அமுதாவின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பத்மினியை வலுக்கட்டாயமாக ஏற்றும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த காரின் பதிவு நம்பரை வைத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
கடத்தல் சம்பவம் நடந்த இடம்
பத்மினி கடத்தல் சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிக்குமார், உத்ரகுமார் ஆகியோர் கடந்த 3 நாள்களாக பத்மினி மற்றும் மேனகாவின் செல்போன் சிக்னலை வைத்து காரைப் பின்தொடர்ந்தனர்.
பத்மினியைக் கடத்திய கார், செங்கல்பட்டு, பூந்தமல்லி, தாம்பரம், திருவள்ளூர் என மாறி மாறி சிக்னலைக் காட்டியது. இருப்பினும் போலீஸார் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.
இந்த வழக்கில் போலீஸார் தீவிரம் காட்டத் தொடங்கியதால் மேனகா தரப்பு அவரை நேற்று அயனாவரத்தில் விட்டுவிட முடிவு செய்தது.
இதற்காக பத்மினியை காரில் அழைத்துவந்த மேனகா, அயனாவரத்தில் அவரை இறக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது மேனகாவை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.
பத்மினியையும் மீட்டனர். தொடர்ந்து பத்மினியிடமும் மேனகாவிடமும் போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “பத்மினியின் பெயரில் உள்ள வீடு, நிலங்களை தன்னுடைய பெயருக்கு எழுதித்தரும்படி மேனகா தரப்பு மிரட்டிவந்துள்ளது. இதனால்தான் தங்கை மகளின் வீட்டுக்கு பத்மினி வந்துள்ளார்.
பத்மினியிடமிருந்து சொத்துகளை எழுதி வாங்கத்தான் மேனகா தரப்பு அவரைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு உதவியாக இருந்தவர்களையும் தேடிவருகிறோம். மேனகாவிடம் விசாரித்தபோது மாமியாரைக் கடத்தவில்லை. வீட்டுக்குத்தான் அழைத்துச் சென்றேன் என்று கூறுகிறார். ஆனால் பத்மினி அளித்த தகவலின்படி மேனகாவை கைது செய்துள்ளோம்” என்கின்றனர்.
பத்மினியிடம் பேசினோம். “சொத்துக்காக என் கணவர், இரண்டாவது மகன் ஆகியோரை இழந்துவிட்டேன். மூத்த மகன் செந்தில் எங்கு இருக்கிறார் என்றுகூட தெரியவில்லை.
மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு செந்தில் செயல்பட்டான். செந்திலின் மனைவி மேனகா மற்றும் அவரின் குடும்பத்தினரால் நானும் என் குடும்பமும் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்துள்ளோம். அவர்களுக்குப் பயந்துதான் தங்கை மகளின் வீட்டுக்கு வந்தேன்.
அங்கு வந்த மேனகா, என்னை காரில் கடத்திச் சென்று சொத்துகளை எழுதித் தரும்படி கேட்டார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமான மேனகாவுடன் வந்தவர்கள் என்னை அடித்தனர். மொத்தம் 3 பெண்கள், 3 ஆண்கள் இருந்தனர். அவர்கள் என்னை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். சத்தம் போட்டால் சுட்டுவிடுவதாகக் கூறினார்கள். இதனால் அமைதியாக இருந்தேன்.
காட்டுப்பகுதிக்குப் பகலில் அழைத்துச் சென்றுவிடுவார்கள். இரவில் ஏதாவது ஒரு இடத்தில் தங்க வைப்பார்கள். ஒருநாள் இரவு ஒரு வீட்டில் என்னைத் தங்க வைத்தனர்.
அந்த அறை இருட்டாக இருந்தது. இதனால் அது எந்த இடம் என்று தெரியவில்லை. எனக்கு சாப்பிட இட்லியும் டீயும் மட்டுமே கொடுத்தனர்.
அதில் விஷம் வைத்திருக்கலாம் என்று பயந்து நான் எதையும் சாப்பிடவில்லை. இதனால் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். ஒரே ஒரு இட்லியை மட்டும் சாப்பிட்டேன். மற்றபடி நான் பட்டினியாகவே கிடந்தேன்” என்றார் கண்கலங்கியவாறு.