காணாமல் போன விமானத்தின் விமானி பேராசிரியர் டேவிட் லாஸ்ற் என அறியப்பட்டுள்ளார்
26 Nov,2019
வேல்ஸ் கடற்பகுதியில் நேற்றுக் காணாமல் போன விமானத்தின் விமானி 79 வயதான பேராசிரியர் டேவிட் லாஸ்ற் என்று தெரியவந்துள்ளது.
குறித்த இலகுரக விமானம், கெனாஃபன்(Caernarfon) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பறந்துகொண்டிருந்தபோது காணாமல்போனதாக வடக்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலோரக் காவல்படையினர் பென்மோனுக்கு அருகிலுள்ள பஃபின் தீவைச் சுற்றி தேடுதல் நடத்தியிருந்தனர்.
எனினும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் விமானத்தில் விமானியைத் தவிர வேறு எவரும் பயணிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் டேவிட் லாஸ்ற், வேல்ஸின் பான்கோர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் ஆலோசகராகப் பணியாற்றினார் என்றும் வானொலித் தகவல்தொடர்பு அமைப்புகளில் நிபுணராக விளங்கினார் என்றும் கூறப்படுகின்றது.