முதல் மனைவியின் குழந்தை மீது உயிராய் இருந்த கணவர் சொத்து பயம்! குழந்தையை கொன்று மூட்டைக் கட்டிய சித்தி
26 Nov,2019
இந்தியாவில், ஆந்திர மாநிலம் பகடால பேட்டையைச் சேர்ந்தவரே ஷியாம்குமார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சத்தியவேணியின் மகள் தீப்திஸ்ரீ இஷானி. இதற்கிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு சத்தியவேணி இறந்துவிட சாந்தகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் ஷியாம்.
சிறுமி இஷானி தற்போது 2ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடம் சென்ற இஷானியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஷியாம் மாலை பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுமி இஷானி இல்லை.
பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, பொலிஸ் நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார் ஷியாம். புகாரின் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில், பொலிஸாரின் பார்வை ஷியாமின் இரண்டாவது மனைவி சாந்தகுமாரி பக்கம் திரும்பியது. அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டபொழுது, இஷானி கைக்குழந்தையாக இருக்கும்போதே அவரின் தாய் இறந்துவிட்டதால் தன்னை ஷியாம் திருமணம் செய்துகொண்டதாகவும், ஓராண்டுக்கு முன்பு சாந்தகுமாரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு சிறுமி இஷானியைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளார். அவரின் கொடுமை தாங்க முடியாமல்தான் சிறுமியை தன் தாய் வீட்டில் வைத்து வளர்த்துவந்துள்ளார் ஷியாம். தினமும் பள்ளி முடிந்து சிறுமியை தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்ட பிறகுதான் தனது வீட்டுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் ஷியாம். இதை பொலிஸில் தெரிவித்தன் அடிப்படையில் சாந்தகுமாரியை முதலில் விசாரித்துள்ளனர். ஆனால், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறவே அவரை விடுவித்துள்ளனர்.
சாந்தகுமாரியை விடுவித்த பிறகு இஷானி படித்துவந்த பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர் பொலிஸார். அப்போது இஷானியின் உடன் படித்துவந்த குழந்தைகள், `அவரது சித்தி தான் வந்து அழைத்துச் சென்றார்’ எனக் கூறியுள்ளனர். மதிய இடைவேளையின்போது இஷானியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார் சாந்தகுமாரி. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது இந்தக் காட்சிகள் சிக்க மீண்டும் சாந்தகுமாரியை தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர் பொலிஸார்.
பொலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்துள்ளார் சாந்தகுமாரி. இதுதொடர்பாக பொலிஸார் கூறும்போது, “தங்களுக்கு மகன் பிறந்த பிறகும் கணவன் ஷியாம் குமார் முதல் மனைவி குழந்தை மீது அதிக அக்கறை செலுத்திவந்தார். வேலை முடிந்த பிறகு வீட்டுக்குநேராக வராமல் சிறுமி இஷானியைப் பார்த்த பிறகு சாந்தகுமாரி வீட்டுக்கு வந்துள்ளார். மேலும், குழந்தையைப் பராமரிக்க மாதம் 2,000 தருகிறார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்தவண்ணம் இருந்தது.
இதனால் சிறுமி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார் சாந்தகுமாரி. சிறுமி மீது ஷியாம் அதிக பாசம் வைத்திருந்ததால் அவள் பெயரிலேயே சொத்தை எழுதிவைத்துவிடுவார் என்றும், தன் மகனுக்கு ஏதும் கிடைக்காது என்ற அச்சத்தில் இருந்துள்ளார். சிறுமியைப் பராமரிக்க பணம் கொடுப்பது, சொத்து சிறுமிக்கு சேருவதைத் தடுக்க திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமை இஷானியை பள்ளிக்குச் சென்று அழைத்துவந்தவர் நேராக வீட்டுக்குச் சென்று சாக்குப்பை உள்ளிட்டவைகளை எடுத்துள்ளார்.
பின்னர் சிறுமி மீதும் தன் மீதும் கறுப்புத் துணிகளை கட்டிக்கொண்டு அருகில் உள்ள ஏரிக்குச் சென்றவர் அங்கு இஷானியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமியின் உடலை சாக்குப்பைக்குள் வைத்து அடைத்து ஏரிக்குள் வீசிவிட்டு வீட்டுக்கு வந்து எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட்டார்” என்றனர். சாந்தகுமாரியிடம் வாக்குமூலம் பெற்றபிறகு ஏரிக்கரைக்கு விரைந்த பொலிஸார் மூன்று குழுக்களை அமைத்து ஏரியில் சிறுமியின் சடலத்தை தேடியுள்ளனர். பல மணிநேர தேடலுக்குப் பிறகு அங்கு சாக்குமூட்டையில் கொடூரமான முறையில் சிறுமி சடலம் மீட்கப்பட்டது.
சித்தியின் கொடுமையால் தன் பாட்டி வீட்டில் வசித்திருந்த சிறுமி இஷானி அந்தப் பகுதி மக்களிடம் நல்ல பிரபலமானவர். பாட்டி வீட்டில் நிம்மதியாக இருந்தவர் அவ்வப்போது உறவினர்களுடன் டிக்டாக் வீடியோ போட்டு பிரபலமாகியுள்ளார். டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான சிறுமி கொல்லப்பட்ட செய்தி அறிந்து அந்தப் பகுதி மக்கள் ஏராளமானோர் அவரைத் தேட திரண்டுவிட்டனர். இதற்கிடையே, சாந்தகுமாரியைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
சித்தியின் இப்படிப்பட்ட கொடூரச்செயலைக் கண்டித்தும் சிறுமியின் சோகமான நிலைக்குறித்தும் ஊர்மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.