கிரேஸ் மில்லேன் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டார் : நியூசிலாந்து நீதிமன்றம்
22 Nov,2019
பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பெண் கிரேஸ் மில்லேன் நியூசிலாந்தில் கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டார் என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
எஸெக்ஸ், விக்ஃபேர்ட்டினைச் சேர்ந்த கிரேஸ் மில்லேன் (வயது 22) லிங்கன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபின் திட்டமிட்ட தனது உலகம் முழுவதுமான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நியூசிலாந்துக்குச் சென்றார்.
இவ்வாறு நியூசிலாந்தின் ஒக்லன்ட் நகருக்குச் சென்றபோது 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் 2 ஆம் திகதி விடுதி ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒக்லன்ட்டில் இரண்டு வாரமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் 22 வயதான பிரித்தானியப் பிரஜை கிரேஸ் மில்லேனை நியூசிலாந்து நபர் ஜெஸ்ஸி கெம்ப்சன் (வயது 27) கொலை செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில்; முரட்டுத்தனமான பாலியல் உறவின்போது கிரேஸ் மில்லேன் தற்செயலாக இறந்துவிட்டதாக குற்றவாளி ஜெஸ்ஸி கெம்ப்சன் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
இதனை மறுதலித்த வழக்குரைஞர்கள், சந்தேகநபர் ஒரு மோசமான பாலியல் ஆர்வத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக கிரேஸ் மில்லேனைக் கொன்றதாகவும், மில்லேனின் உடலை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அவரது உடலை பல்வேறு கோணங்களில் படம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிரேஸ் மில்லேனின் கழுத்தை நெரித்துக் கொன்ற பின்னர் அவரது உடலை சூட்கேஸுக்குள் வைத்து இழுத்துச் சென்ற ஜெஸ்ஸி கெம்ப்சன் ஒக்லன்ட்டுக்கு வெளியே உள்ள ஓரிடத்தில் புதைத்துள்ளார்.
ஜூரிகளைக் கொண்ட அந்தத் தீர்ப்பாயம் ஐந்து மணி நேர விவாதத்துக்குப் பின்னர் ஒருமனதாக சந்தேகநபரைக் கொலைக் குற்றவாளி எனக் கண்டறிந்தது. இந்த நேரத்தில் குற்றவாளி ஜெஸ்ஸி கெம்ப்சன் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை.
கொலையாளி ஜெஸ்ஸி கெம்ப்சன் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு நடைபெற்றபோது கிரேஸ் மில்லேனின் பெற்றோர்களான டேவிட் மற்றும் கில்லியன் ஆகியோர் நீதிமன்றத்தில் அழுதனர்.
கிரேஸ் மில்லேன் காணாமல்போன சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஜெஸ்ஸி கெம்ப்சனுடன் ஸ்கை சிற்றியில் மது விருந்தில் காணப்பட்டதாகவும் அதன்பின்னர் இருவரும் சேர்ந்து விடுதிக்குச் சென்றதாகவும் சிசிரிவி கமரா காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.