’பர்பெக்சனிசம்’ உள்ளவர்கள் கவலை, மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் ஆகிய மனநல பிரச்சினைகளுக்கு ஆளாவதுடன், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள், என்கின்றனர் நிபுணர்கள்.
பரிபூரணத்துவம் எனும் மனநோய்
முழுமையாக ஒரு வேலையை முடிப்பதில் பிடிவாதமாக இருப்பதற்கு பரிபூரணவாதம் என்று பெயர். அதாவது ஆங்கிலத்தில் ‘பர்பெக்சனிசம்’.
வல்லுனர்கள் பரிபூரணவாதத்தை, ஒருவர் வகுத்து கொள்ளும், அதிகப்படியான மிக உயர்ந்த தனிப்பட்ட தரநிலைகள் மற்றும் அதிகப்படியான விமர்சன சுய மதிப்பீடுகளின் கலவை என்று வரையறுக்கின்றனர்.
கோர்டன் பிளெட் மற்றும் பால் ஹெவிட் எனும் இரண்டு நிபுணர்களும், பரிபூரணத்துறையில் ஆராய்ச்சிகள் நடத்தியவர்கள்.. இவர்கள் இருவரும் இந்த தலைப்பை பல வருடங்களாக ஆய்வு செய்துள்ளனர். இந்த இரு உளவியலாளர்களும் சேர்ந்து, கிட்டத்தட்ட 30 வருடங்களாக மேற்கொண்ட முக்கிய ஆய்வின் அடிப்படையில் பரிபூரணத்தின் மூன்று முக்கிய அம்சங்களை வரையறுத்தனர். சுயம்சார்ந்த பரிபூரணவாதம், பிறர் சார்ந்த பரிபூரணவாதம் மற்றும் சமூக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பரிபூரணவாதம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அதாவது, சமூக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பரிபூரணவாதத்தில், தனிநபர்களிடத்தில் சமூகம் அதிகமாக எதிர்பார்ப்பதும், ஒருவர் செய்யும் செயல்கள் மீது சமூகம் கடுமையாக தீர்ப்பளிப்பதால், தங்களை நிரூபிப்பதற்காக தன் வேலையில் முழுமையை காட்ட வேண்டும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த சமூகரீதியான ’பர்பெக்சனிசம்’ உள்ளவர்கள் கவலை, மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் ஆகிய மனநல பிரச்சினைகளுக்கு ஆளாவதுடன், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள், என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும், இந்த ஆய்வில், தற்கொலை செய்து கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களால் பரிபூரணவாதிகள் என்று விவரிக்கப்படுகிறார்கள். மற்றொரு ஆய்வில், தற்கொலை செய்து கொண்ட இளைஞர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களை மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கும் பழக்கத்தில் உள்ளனர் என்றும் கண்டறியப் பட்டுள்ளது. இந்த பர்பெக்சனிசம் எனும் மன நோய் குறிப்பாக இளைஞர்களை கடுமையாக தாக்குகிறது.
சமீபத்திய மதிப்பீடுகளின்படி மாணவர்களிடத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் மனச்சோர்வின் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்றும், பெரும்பாலும் இந்த அறிகுறிகள் பர்பெக்சனிசத்தோடு பரவலான தொடர்புடையதாக இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் பர்பெக்சனிசத்தின் தீமைகள் மன ஆரோக்கியத்தோடு நின்றுவிடவில்லை. சில ஆய்வுகளில், உயர் ரத்த அழுத்தம் பர்பெக்சனிச மக்களிடையே அதிகம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த குணம் இதய நோயுடன் தொடர்புள்ளதையும் நிரூபிக்கின்றன. இவர்கள் உடல்நோயை எதிர்கொள்ளும் நிலையில், கூடுதலாக நோயிலிருந்து மீளக்கூடிய நேரமும் அதிகமாகிறது.
இவர்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளேயே பேசி கொள்பவர்களாகவும், ஒரு வேலையை செய்ய கடுமையாக முயற்சி செய்திருந்தாலும் கூட, தாங்கள் எதற்கும் லாயக்கற்றவர் என்ற ரீதியில் தன்னைத்தானே விமர்சித்து கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களது உள்குரலானது, நீ இந்த வேலையை சரியாக செய்யவில்லை என்று அடிக்கடி எச்சரித்துக் கொண்டே இருப்பதால், தன்னைத்தானே தண்டித்து கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.